தமிழ்நாட்டு மக்களுடனான 54 மாத பழக்க வழக்கம், வாழ்வின் மறக்க முடியாத பொற்காலம் என்று, தமிழக ஆளுநர் பொறுப்பில் இருந்து விடைபெறும் நிலையில் ஆர்.என்.ரவி நெகிழ்ச்சி தெரிவித்து உள்ளார். விடைபெற்றார் ஆளுநர் ஆர்.என்.ரவிமேற்கு வங்க ஆளுநராக பதவியேற்க உள்ள நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டுச் சென்றார். கடந்த 2021 செப்டம்பர் 18ஆம் தேதி தமிழகத்தின் 26ஆவது ஆளுநராக ஆர்.என்.ரவி பதவி ஏற்றார். இந்நிலையில், ஆர்.என்.ரவியை மேற்கு வங்க ஆளுநராக நியமனம் செய்து குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டார்.மேற்கு வங்கத்தில்... மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று மார்ச் 11ஆம் தேதி, கொல்கத்தாவுக்கு ஆர்.என்.ரவி செல்கிறார். தொடர்ந்து, மார்ச் 12ஆம் தேதி காலையில், லோக் பவனில் ஆர்.என்.ரவிக்கு கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். மேற்கு வங்க ஆளுநராகப் பதவி வகித்து வந்த சி.வி.ஆனந்த போஸ் தனது பதவியை மார்ச் 5ஆம் தேதி ராஜினாமா செய்தார். இதையடுத்து மேற்கு வங்கத்துக்கான புதிய ஆளுநராக தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி நியமிக்கப்பட்டார். காவல்துறை மரியாதையுடன்... தமிழ்நாடு ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி, டெல்லி புறப்பட்டுச் சென்றார். சென்னை விமான நிலையத்தில், காவல்துறை மரியாதையுடன் ஆர்.என்.ரவி வழியனுப்பி வைக்கப்பட்டார். நெகிழ்ச்சி, மகிழ்ச்சி இந்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டிற்கு நன்றி தெரிவித்து வாழ்த்து செய்தி வெளியிட்டு உள்ளார். அதில் கூறி இருப்பதாவது; கடந்த 54 மாதங்கள், உங்களோடு கலந்து பழகி, உங்கள் அன்பில் திளைத்து, தமிழின் பெருமையிலும் தமிழ் மக்களின் பெருமிதத்திலும் மகிழ்ந்திருந்தேன். வாழ்க்கையின் ஓட்டத்தில், இப்போது உங்களை விட்டு பிரிகிற சூழல் வந்தாலும், உங்களோடு செலவிட்ட இந்த நாட்கள், என் வாழ்வின் பொற்கால நாட்கள் என்பதில் சந்தேகமில்லை.‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ அன்புச் சகோதர சகோதரிகளே, உங்களிடம் என்னைக் கவர்ந்த மிகப் பெரும் சிறப்பு, உங்களின் அயராத உழைப்பு, உழைப்பின் களிப்பு. தலைநகரம் சென்னை முதல், நெல்லை, கன்னியாகுமரியிலும் உள்ள கடைக்கோடி கிராமங்கள், கிழக்குக் கடற்கரை முதல் மேற்கு மலைச் சாரல் என்று பற்பல ஊர்களுக்கும் சென்றேன். நான் சென்ற இடங்களிலும் கண்ட காட்சிகளிலும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் கணியன் பூங்குன்றனாரின் வாக்கு மெய்யாக மிளிர்ந்து இருந்தது. தமிழ்நாட்டு இளைஞர்களும் மாணவர்களும், நவீனத்துவத்தின் மேன்மையை முறையாக உணர்ந்திருக்கின்றனர். நவீனகால தொழில்நுட்ப மேம்பாடுகளை அழகாகப் பயன்படுத்துகின்றனர். ’செயற்கை நுண்ணறிவை’ இயற்கையான செறிவோடு கையாளுகின்றனர். அன்புச் சகோதர சகோதரிகளே, சொல்லச் சொல்ல விரியும் என்பதாக என்னுடைய அனுபவங்களும் ஆனந்தமும் விரிந்து கொண்டே போகின்றன.நலம் வளர என்றென்றும் பிரார்த்திப்பேன்இவற்றுக்கெல்லாம் அடிப்படை, நீங்கள் காட்டிய அன்பு. உங்களின் அன்பை விரிக்க வார்த்தைகள் போதா - என் நன்றியை உரைக்கவும் வார்த்தைகள் போதா, அன்பானவர்களே, அனைவருக்கும் என் அன்பு வணக்கங்களையும் நன்றிகளையும் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் நலம் வளர என்றென்றும் பிரார்த்திப்பேன். இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறி உள்ளார். Related Link ஆபரண தங்கத்தின் விலை அதிகரிப்பு