Also Watch
Read this

தாய்த் தமிழைக் காக்க எந்தத் தியாகத்துக்கும் ஆயத்தமாக இருக்கும் இளைஞர்களே, உழைப்பை மட்டும் கொடுங்கள் போதும், உயிரை அல்ல என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
ஆறுதல் கூறினேன்...
முதல்வரின் சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது;
தாய்த் தமிழைக் காக்க எந்தத் தியாகத்துக்கும் ஆயத்தமாக இருக்கும் இளைஞர்களே, உழைப்பை மட்டும் கொடுங்கள் போதும்; உயிரை அல்ல. இந்தி திணிப்புக்கு எதிராக மே-17 இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்தி எழுத்து அழிப்பு போராட்டத்தில், யாரும் எதிர்பாராத நிலையில், உணர்ச்சிப் பெருக்கால் ரயில் முன் பாய்ந்து, பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சகோதரர் சிவா திலீபன் மற்றும், உடனிருக்கும் மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திருஜா- வை சந்தித்து ஆறுதல் கூறினேன்.

“பிள்ளைகளைப் பலி கொடுக்கவா இயக்கம் நடத்துகிறோம்”
அப்போது, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் சகோதரர் சிவா திலீபன் நலம்பெற வேண்டும் எனவும், “பிள்ளைகளைப் பலி கொடுக்கவா இயக்கம் நடத்துகிறோம்” என்று மொழிப்போரின் போது பேரறிஞர் அண்ணா சொன்னதும் ஒருசேர என்னுள் எழுந்தது. இருந்து போராட வேண்டும்; அதன் பயனை நாம் இருந்து காண வேண்டும்.

சிந்தித்துச் செயல்படுவோம்
தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் சூழ்ச்சிகளை அரசியல் களத்தில் ஒற்றுமையுடன் முறியடிப்போம். உணர்ச்சிகள் நம் அறிவாற்றலை ஆட்கொள்ள விடாமல், சிந்தித்துச் செயல்படுவோம். எனவே, நமது போராட்ட நோக்கம் சரியானதாக இருந்தாலும், உணர்ச்சி வயப்பட்டு இதுபோன்ற செயல்களை யாரும் செய்யக் கூடாது என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். சகோதரர் சிவா திலீபன் நலம் பெற்றுத் திரும்ப அனைத்துச் சிறப்பு கவனிப்புகளையும் செய்ய மருத்துவர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved