Also Watch
Read this
சமையல் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பாக, தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் அவசர ஆலோசனை நடைபெற்றது. தமிழ்நாட்டில், கையிருப்பில் உள்ள சமையல் மற்றும் வணிக சிலிண்டர்களின் விவரங்களை இன்று மார்ச் 10ஆம் தேதி பிற்பகலுக்குள் தெரிவிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு
வணிக சிலிண்டர்களை போலவே, வீட்டு உபயோக சிலிண்டர்கள் விநியோகத்திலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கேஸ் சிலிண்டர்களை புக் செய்வதில், புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டு, 25 நாட்களுக்கு பிறகே 2ஆவது கேஸ் சிலிண்டருக்கு புக் செய்ய முடியும் என்பதால், இல்லத்தரசிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
தொடரும் போர்...
மத்திய கிழக்கில் போர் விரிவடைந்து வரும் சூழ்நிலையில், கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 110 டாலர் முதல் 120 டாலர் வரை உயர்ந்தது. இதனை தொடர்ந்து, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.60 உயர்த்தப்பட்டது. தற்போது அதன் முன்பதிவுக்கு உயர்நிலை குழு கூட்டத்தில் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.

முன்பதிவில் மாற்றம்
சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு 21 நாட்கள் இடைவெளியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது 25 நாட்களாக உயா்த்தப்பட்டு உள்ளது. இதன்படி, சிலிண்டர் விநியோகிக்கப்பட்ட 25 நாட்களுக்குப் பிறகே அடுத்த சிலிண்டருக்கான முன்பதிவை, இனிமேல் செய்ய முடியும்.

தலைமைச் செயலாளர் ஆலோசனை
இந்த நிலையில், எண்ணெய் நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு அவசர ஆலோசனை நடத்தியது. கையிருப்பில் உள்ள சிலிண்டர்கள் விவரம் குறித்து இன்று, மார்ச் 10ஆம் தேதி பிற்பகலுக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் அறிவுறுத்தி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved