Also Watch
Read this
மகளிர் உரிமைத் தொகை 2000 ரூபாய் என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த பிறகு தான் எடப்பாடி பழனிசாமியும் வாக்குறுதி அளித்தார் என்று, அதிமுகவின் தேர்தல் அறிக்கையை திமுக காப்பி அடித்துள்ளதாக, இபிஎஸ் கூறியதற்கு கனிமொழி எம்.பி. பதில் அளித்து உள்ளார்.

அதிமுக தேர்தல் அறிக்கையை...
இதுதொடர்பாக, கனிமொழி எம்பி கூறியதாவது;
அதிமுக தேர்தல் அறிக்கையை படிக்கக் கூட எங்களுக்கு நேரமில்லை. அதிமுகவின் தேர்தல் அறிக்கையை யாரும் பெரிதாக பொருட்படுத்துவது இல்லை. நிறைவேற்றக் கூடிய தேர்தல் அறிக்கையை தயாரிக்க வேண்டும் என்று, முதல்வர் அறிவுறுத்தி இருந்தார். 2021 சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. காலை உணவு திட்டம், வீடு தேடி மருத்துவம் போன்ற சொல்லப்படாத திட்டங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி உள்ளார். மீதமுள்ள 101 வாக்குறுதிகளில் 37 வாக்குறுதிகள் ஒன்றிய அரசின் ஒத்துழைப்பால் தான் நிறைவேற்ற முடியும் என்கிற காரணத்தால், அவை நிறைவேற்ற முடியாத சூழல் உள்ளது. மீதமுள்ள 64 திட்டங்கள் மக்களின் எதிர்ப்பு காரணமாக நிறைவேற்ற முடியவில்லை.

80 ஆயிரம் பேரிடம் கருத்துக்கேட்பு
80,000 பேரிடம் கருத்துகளை பெற்று தேர்தல் அறிக்கையை தயாரித்து உள்ளோம். ஒவ்வொரு துறையில் உள்ள நிபுணர்களின் ஆலோசனைப்படி, இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. அதிமுக தான் திமுகவின் திட்டங்களை தேர்தல் அறிக்கையாக அறிவித்து உள்ளது. அதிமுக ஆட்சியில் செயல்படுத்தாத வாக்குறுதிகளை பட்டியலிட்டால், அது நீண்டு கொண்டே போகும். அப்படியிருக்க திமுகவின் தேர்தல் அறிக்கை காப்பி அடிக்கப்பட்டதாக கூறுவது வேடிக்கையானது. பொள்ளாச்சியில் நடந்த பாலியல் குற்றத்தை எப்ஐஆர் கூட பதிவிட முன்வராமல், குற்றவாளிகளை காப்பாற்ற அத்தனை முயற்சிகளை செய்தது அதிமுக. ஆனால், திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பில் குற்றம் புரிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை முதல்வர் உறுதி செய்துள்ளார்.
இவ்வாறு கனிமொழி எம்பி கூறி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved