விருதுநகர் அருகே பட்டாசு தொழிற்சாலையில் 4 மணிநேரத்திற்கும் மேலாக நிற்காமல் பயங்கர சத்தத்துடன் வெடி வெடித்து சிதறிய நிலையில் வெடி அதிர்வால் 25-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக கூறி பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆலையில் பணிபுரிந்த வடமாநில தொழிலாளர்கள் எங்கு உள்ளனர்? அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா? என்பதுகுறித்து போலீசார் விசாரரணையில் இறங்கி உள்ளனர்..விருதுநகர் மாவட்டம் சிந்தப்பள்ளி கிராமத்தில் விஸ்வநத்தத்தைச் சேர்ந்த கந்தசாமி என்பவருக்கு சொந்தமான திருமுருகன் என்ற பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது. நாக்பூர் உரிமம் பெற்று இயங்கி வரும் இந்த தொழிற்சாலையில் 25-க்கும் மேற்பட்ட அறைகளில் 50-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் ஃபேன்சிரக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் வழக்கம்போல காலை 6 மணியளவில் பட்டாசு தயாரிப்பதற்கான மருந்து கலவை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டதாகவும், அப்போது எதிர்பாராதவிதமாக உராய்வு ஏற்பட்டு வெடி வெடிக்க தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் அதிர்வு ஏற்பட்டதாகவும் தெரிகிறது.இதுகுறித்து தகவல் அறிந்து விருதுநகர், சாத்தூர், சிவகாசி, வெம்பக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 35-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் பத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்களும் மீட்பு பணிக்காக வந்தன. ஆனால் 4 மணிநேரமாக ஆலையை நெருங்க முடியாமல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.. நிற்காமல் படபடவென பட்டாசுகள் வெடித்துக் கொண்டே இருந்ததால் அப்பகுதியே நெருப்பும் புகையுமாக காட்சியளித்தது. பட்டாசு சத்தமும், வானத்தை நோக்கி புகை சுழன்ற காட்சியும் ஒருபுறம் பதற்றத்தை ஏற்படுத்த, மறுபுறம் ஆலைக்கு அருகிலேயே தங்கி இருந்த வடமாநில தொழிலாளர்கள் வீடுகளின் மேற்கூரை, கதவுகள் ஆகியவையும் சேதமாகி இருந்தன. அவர்கள் என்ன ஆனார்கள்? பட்டாசு வெடிக்க ஆரம்பித்ததும் ஓடி தங்கள் உயிரை காப்பாற்றி கொண்டார்களா? அல்லது விபத்தில் சிக்கி கொண்டார்களா? என்ற அச்சம் நிலவுகிறது..