தருமபுரி மாவட்டம், பிலியனூரில் ரைஸ் மில்லில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்தில் அவரது நண்பன் கைது செய்யப்பட்டார். பெண்களுடன் தனிமையில் இருந்த வீடியோவை எடுத்து வைத்துக் கொண்டு பணத்திற்காக நண்பனே மிரட்டிய நிலையில், தன்னை மிரட்டியது நண்பன் தான் என்பதை தெரிந்து கொள்ளாமலேயே ரைஸ் மில் உரிமையாளரின் உயிர்பறிபோன சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.தருமபுரி மாவட்டம், பிலியனூரை சேர்ந்த ரைஸ் மில் உரிமையாளரான புகழேந்தி, 4 ஆம் தேதி அதிகாலை தனது ரைஸ் மில்லில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்க்கப்பட்ட சம்பவம், குடும்பத்தாரை மட்டுமின்றி ஊர் மக்களையே அதிர்ச்சி கொள்ள வைத்தது. குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் மகிழ்ச்சி ததும்பிய வீட்டில், புகழேந்திக்கு அப்படி என்ன பிரச்னை வந்திருக்கும் என அக்கம் பக்கத்தினர் வாயில் அசைபோட்டுக்கொண்டிருக்க, போலீசாரே மரணத்துக்கு காரணம் என குற்றம் சாட்டி குடும்பத்தினர் சாலையை மறித்த நிலையில், போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன....கடந்த 2021 ஆம் ஆண்டில் புகழேந்தியும் அவரது உயிருக்கு உயிரான நண்பன் சதீஷும் அவ்வப்போது இளம்பெண்களுடன் தனிமையில் இருந்து வருவதை வாடிக்கையாக கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. இதை வைத்து புகழேந்தியிடம் பணம் பறிக்க திட்டம் போட்ட சதீஷ், புகழேந்தி ஒரு பெண்ணுடன் தனிமையில் இருந்த போது வீடியோ எடுத்து வைத்ததாக சொல்லப்படுகிறது. ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையான சதீஷ், பணத்தேவைக்காக புகழேந்தியை பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டு, அதற்காக தாம் ஏற்கனவே பதிவு செய்திருந்த வீடியோவை பயன்படுத்தியுள்ளான். சதித்திட்டத்துக்காக புது சிம்கார்டை வாங்கிய சதீஷ், அந்த எண்ணிலிருந்து தனக்கும், புகழேந்திக்கும் ஆபாச வீடியோவை அனுப்பி தான் ஒரு போலீஸ் என்றும் வீடியோவை உனது குடும்பத்திற்கு அனுப்பக்கூடாதென்றால் பணத்தை கொடுக்க வேண்டும் என்றும் மிரட்டியுள்ளான்.புது எண்ணிலிருந்து தனது ஆபாச வீடியோவுடன் கூடிய மிரட்டல் வந்ததை கண்டதும் அதிர்ச்சியடைந்த புகழேந்தி, அதுகுறித்து சதீஷிடமே புலம்பியுள்ளார். இதனை கேட்டு, தமக்கு ஒன்றுமே தெரியாதது போல் நடித்து, தனக்கும் ஆபாச வீடியோ அனுப்பி மர்மநபர்கள் மிரட்டியதாக கூறி சிவாஜியே தோற்கும் அளவுக்கு நாடகத்தை அரங்கேற்றியுள்ளான்தன்னை சதீஷ் தான் மிரட்டுகிறான் என்பதை சிறிதும் அறிந்திடாத புகழேந்தி அவனிடமே பணத்தை கொடுத்து, மிரட்டல் காரர்களுக்கு கொடுக்க சொல்லியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து தாமே பணத்தை வாங்கி சென்று மிரட்டல் காரர்களுக்கு கொடுப்பது போல் நடித்தால் சந்தேகம் வந்துவிடும் என அஞ்சிய சதீஷ், கூலிக்கு ஆள்வைத்து புகழேந்தியிடம் சென்று பணத்தை வாங்கி வர வைத்துள்ளான். கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை இழந்த புகழேந்தி ஒரு கட்டத்தில் மனைவியின் அனைத்து நகைகளையும் அடகு வைத்து பணம் கொடுத்து வந்ததாக தெரிகிறது.வீட்டில் இருந்த நகைகளெல்லாம் எங்கே போனது என மனைவியும் பெற்றோரும் நெருக்கடி கொடுத்ததால் வேறுவழியின்றி, நடந்தவற்றை எல்லாம் வீட்டில் கூறி தன்னை போலீசார் மிரட்டுவதாக தெரிவித்துள்ளார் புகழேந்தி... கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பிலிருந்ததை ஏற்றுக்கொள்ளமுடியாமல் அவரது மனைவியும் நகைகள், ரொக்கம் என 12 லட்சம் ரூபாயை இழந்த வேதனையில் பெற்றோரும் ஆதங்கப்பட்டது பெரும் மன உளைச்சலை தந்திருக்கிறது. இதன் காரணமாகவே புகழேந்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.புகழேந்தி புலம்பியதை நம்பியே அவரது உறவினர்களும் போலீசாரை குற்றம் சாட்டி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், புகழேந்தி செல்போனுக்கு அழைத்த எண்களின் இருப்பிடத்தை தேடிய போது, சதீஷின் இருப்பிடத்தை காட்டியதால் போலீசார் அவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பணத்திற்காக உயிருக்கு உயிராய் பழகிய நண்பனின் உயிரையே பறிக்கும் அளவுக்கு நம்பிக்கை துரோகம் நிகழ்ந்த சம்பவம் பென்னாகரம் மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.https://www.youtube.com/embed/XvftKMh8rs8