தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு ஊராட்சிகளை நகராட்சிகளுடனும், மாநகராட்சிகளுடனும் இணைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், அதற்கு கிராம மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.வளர்ச்சியை கணக்கில் கொண்டு பல்வேறு ஊராட்சி பகுதிகளை நகராட்சியுடனும், மாநகராட்சியுடனும் இணைத்திட அரசு முயற்சித்து வரும் நிலையில், பல பகுதிகளில் அதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக காந்தி ஜெயந்தியன்று பல்வேறு இடங்களில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில், தங்களது ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்கவோ அல்லது மாநகராட்சியுடன் இணைக்கவோ எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.திருநெல்வேலி மாநகராட்சி பகுதியுடன் மேலும் 12 கிராமங்களை இணைத்திட மேயர் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இதற்கு இராமையன்பட்டி ஊராட்சியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. கிராம சபை கூட்டத்தை நடத்த விடாமல் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஊராட்சி உறுப்பினர் மாரியப்ப பாண்டியன் தரையில் படுத்து உருண்டு மாநகராட்சியுடன் இணைக்க வேண்டாம் என கோஷம் எழுப்பினார்.