தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கன மழையால், விளை நிலங்களில் மழை வெள்ளம் சூழ்ந்து, நெற்பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏக்கருக்கு 15 முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளதாக கூறும் விவசாயிகள், வடிகால் வாய்க்கால்கள் முறையாக தூர் வாராததே இதற்கு காரணம் என குற்றம் சாட்டுகின்றனர்.மயிலாடுதுறை: மாவட்டம் முழுவதும் கடந்த வாரம் பெய்த கன மழையால் 50 ஆயிரம் ஏக்கரில் நடவு செய்யப்பட்ட சம்பா பயிர்களை மழை நீர் சூழ்ந்துள்ளது. பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதால் வேதனை அடைந்த விவசாயிகள், ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளதால், பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ள தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வடிகால், வாய்க்கால்களை தூர் வாரி தரவும் வலியுறுத்தி உள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பாண்டு குறுவை பருவத்திற்கு 144 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்ட நிலையில், இதில் 127 கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. 17 கொள்முதல் நிலையங்கள் மட்டும் இயங்கி வரும் நிலையில், ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களிலும் சுமார் 5000 நெல் மூட்டைகள் என முப்பதாயிரம் மெட்ரிக் டன் நெல் தேக்கமடைந்துள்ளன. தற்போது, நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைக்க தொடங்கியுள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்தனர். நாகை: மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தேவூர், ராதாமங்கலம், இலுப்பூர், சாட்டியக்குடி,கோயில் கண்ணபூர், ஆந்தகுடி, ஆதமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் தொடர் கன மழையால், அறுவடைக்குத் தயாராக இருந்த சுமார் 1,500 ஏக்கரிலான குறுவை நெற் கதிர்கள் நீரில் மூழ்கியதால், விவசாயிகள் கவலை அடைந்தனர். நாகை திருமருகல் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால், அறுவடைக்கு தயாராக இருந்த 5 ஆயிரம் ஏக்கரிலான நெற்கதிர்கள் மழை நீரில் மூழ்கியதால், விவசாயிகள் வேதனை அடைந்தனர். வாய்க்கால்கள் தூர் வாராததே இதற்கு காரணம் என குற்றம் சாட்டும் விவசாயிகள், ஏக்கருக்கு சுமார் 30 ஆயிரம் வரை கடன் வாங்கி செலவு செய்து பெரும் இழப்பை சந்தித்துள்ளதாகவும் அதிகாரிகள் ஆய்வு செய்து இழப்பீடு வழங்கவும் கோரிக்கை விடுத்தனர். திருவாரூர்: மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் குடவாசல் வட்டத்திற்குட்பட்ட வெள்ளை அதம்பார் பகுதியில் 40 நாட்கள் ஆன இளம் சம்பா நெற் பயிர்கள் மழை நீரில் மூழ்கின. வயல்களில் தேங்கிய மழை நீரை வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் ஏக்கருக்கு பத்தாயிரம் ரூபாய் செலவு செய்துள்ளதாகவும் அதிகாரிகள் நிலங்களை பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் 5 ஆயிரம் ஏக்கரிலான தாளடி நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ளதாக கூறும் விவசாயிகள், பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, வேதனை தெரிவித்தனர்.புதுச்சேரி: நெற்களஞ்சியமான பாகூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கரிலான விளை நிலங்களை மழை நீர் சூழ்ந்துள்ளதால், நடவு செய்து 15 நாட்களே ஆன நெற்பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றில் உள்ள புதுச்சேரியின் சித்தேரி அணைக்கட்டிலிருந்து வெளியேறும் தண்ணீர் விளை நிலங்களில் வெளியேறுவதே இதற்கு காரணம் என குற்றம் சாட்டிய விவசாயிகள் இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்தனர்.