அடுத்தடுத்த தமிழ் படங்களில், பிஸியாக நடித்து வந்த நடிகை அருந்ததி நாயர், சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்து கடந்த 6 மாதங்களாக படுத்த படுக்கையாக இருப்பதாக தெரியவந்துள்ளது. அருந்ததி நாயரின் உடல்நிலை குறித்து நியூஸ் தமிழிடம் பிரத்யேகமாக பேசியுள்ள அவரது சகோதரி பல விஷயங்களை விளக்கியுள்ளார்.தமிழ் சினிமாவில் விஜய் ஆண்டனியின் சைத்தான், விமலின் கன்னிராசி உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை அருந்ததி கடந்த ஆண்டு மார்ச் மாதம் சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். சொந்த ஊரான கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே உள்ள கோவளம் தேசிய சாலையில் தனது சகோதரருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது இந்த விபத்து நடந்த நிலையில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. திருவனந்தபுரம் அனந்தபுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருந்ததி நாயருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால், கடந்த ஒன்றரை வருடமாக அவர் பொதுவெளிக்கு வராத நிலையில், உடல்நலம் குறித்து பல்வேறு தகவல் பரவியது. இந்த நிலையில்தான், அருந்ததி நாயரின் தங்கை ரம்யா தனது அக்காவின் உடல்நலம் குறித்து நியூஸ் தமிழிடம் பேசினார். அருந்ததி நாயருக்கு தலையில் அடிபட்ட காரணத்தால் மூளையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், பிரபல மருத்துவர் சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறிய அவர், நடிகர்கள் பலர் சிகிச்சைக்காக உதவிக்கரம் நீட்டியதாகவும் பகிர்ந்துள்ளார். விஜய் ஆண்டனி, நடிகை நிகிலா, விமல் உள்ளிட்ட நடிகர் நடிகைகள் நேரடியாக வந்து தனது அக்காவை பார்த்துச் சென்றதாகவும், இதுவரை 40 லட்சம் ரூபாய்க்கும் மேலாக சிகிச்சைக்கு செலவாகியுள்ளதாகவும் கூறியுள்ளார். வீட்டில் இருந்தபடியே சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மெல்ல மெல்ல உடல் நலம் தேறி வருவதாக கூறிய ரம்யா, அவ்வப்போது சுயநினைவு இல்லாத சூழல் இருப்பதாகவும், இதனால் பேச முடியாத நிலை நீடிப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஒரு குழந்தையை எப்படி கவனிப்போமோ, அந்த வகையில் தான் தனது அக்காவை கடந்த 6 மாதமாக கவனித்து வருவதாக கூறிய ரம்யா, அவரை நடக்க வைப்பதற்காக பிசியோதெரபி பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். விரைவில் உடல் நலம் தேறி நல்ல நிலைக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தி வரும் ரசிகர்களுக்கு அவர் நன்றியையும் தெரிவித்துள்ளார்.