Also Watch
Read this
Posted on: Aug 26, 2025 01:19 PM
By: Web Team

இந்திய கடற்படையில் ஐஎன்எஸ் உதயகிரி மற்றும் ஹிம்கிரி போர்க்கப்பல்கள் இணைக்கப்பட்டது.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் உதயகிரி மற்றும் ஹிம்கிரி ஆகிய இரண்டு அதிநவீன போர்க்கப்பல்களை மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
அப்போது, ராஜ்நாத் சிங் பேசியதாவது:
இந்தியாவின் நோக்கம் சக்தியைக் காட்டுவது அல்ல. இந்தியா ஒருபோதும் ஆக்கிரமிப்பு கொள்கையை நம்பியதில்லை, நாம் எப்போதும் முதலில் எந்த நாட்டையும் தாக்கியதில்லை என்பது உலகிற்கே தெரியும்.
அதற்காக, நாம் எப்போதும் பின்வாங்குவோம் என்று அர்த்தமாகாது. நமது பாதுகாப்புக்கு எதிரிகளால் ஆபத்து வரும்போது, சரியான பதிலடியை எப்படி அளிப்பது என்று நமக்குத் தெரியும்.
நம் நாட்டின் மீது நடத்தப்பட்ட சமீபத்திய தாக்குதல், நமக்கு அது பெரும் சவாலாக இருந்தது. அதற்கு நாம், மிகுந்த யோசனையுடனும், கவனத்துடனும் பதிலளித்தோம். 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம், பயங்கரவாத தளங்களை வேரோடு அழிக்க முடிவு செய்து, அதை வெற்றிகரமாக நிறைவேற்றினோம்.
இந்த நடவடிக்கை முடிவடையவில்லை, அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.
ஐஎன்எஸ் உதயகிரி, ஐஎன்எஸ் ஹிம்கிரி ஆகிய 2 போர்க் கப்பல்களும் திட்டம்-17 ஆல்பா (P-17A)ன் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க உள்நாட்டு அதிநவீன ரகசிய தொழில்நுட்பத்துடன் இந்த கப்பல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்திய பெருங்கடலில் பாகிஸ்தான், இலங்கை, வங்கதேச நாடுகளில் சீனாவின் கடல் விரிவாக்கம் இந்தியாவுக்கு பெரும் சவாலாக மாறி உள்ளது.
இந்த நிலையில், இந்த 2 போர்க் கப்பல்களும் இந்திய கடற்படைக்கு வலுசேர்க்கும். கடல் வணிக பாதைகளை பாதுகாப்பது மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்திய கடற்படையின் இருப்பை நிலை நிறுத்துவதே நமது நோக்கம் என்று இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved