ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்திய எண்ணெய் கப்பல்களை, ஈரான் அனுமதித்தது. இதனால், இந்திய நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி விரைவில் சீரடைய வாய்ப்பு உள்ளது என்ற நம்பிக்கை எழுந்து இருக்கிறது. இந்திய எண்ணெய் கப்பல்களை அனுமதிக்கும்படி, ஈரான் வெளியுறவு அமைச்சருடன் மத்திய வெளியுறவு அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தியதன் பலனாக, இந்தியாவின் 2 எண்ணெய் கப்பல்களை ஹோர்முஸ் நீரிணை வழியாக ஈரான் அனுமதித்து உள்ளது. ஹோர்முஸ் நீரிணையை...ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பாரசீக வளைகுடாவை அரபிக் கடல் உடன் இணைக்கும் ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாகவும், தடையை மீறிச் செல்லும் எண்ணெய் கப்பல்கள் தாக்கி அழிக்கப்படும் என்றும், ஈரான் பகிரங்க எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில், துபாயில் இருந்து குஜராத் துறைமுகம் நோக்கி வந்து கொண்டிருந்த தாய்லாந்து எண்ணெய் கப்பல், ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கும்போது, ஏவுகணை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. அடுத்தடுத்து பிரிட்டன், ஜப்பான் சரக்கு கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தியதால், பதற்றமான சூழல் நிலவியது. இந்தியா வரும் கப்பல்கள் வளைகுடா நாடுகளில் இருந்து, ஹோர்முஸ் நீரிணை வழியாக கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள்களை இந்தியாவுக்கு கொண்டு வரும் சரக்கு கப்பல்களை அனுமதிப்பது குறித்து, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சியுடன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல்கள் தாக்கப்பட்டு வரும் சூழலில், இந்திய தேசியக் கொடியுடன் வந்த புஷ்பக் மற்றும் பரிமல் ஆகிய இரு சரக்கு கப்பல்களும், ஹோர்முஸ் நீரிணையை கடக்க ஈரான் அனுமதி தந்தது. இதனை தொடர்ந்து, அந்த இரு கப்பல்களும் பாதுகாப்பாக, ஹோர்முஸ் நீரிணையைக் கடந்ததாக தெரிய வந்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு நீங்கும் இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி அளிக்கும் பட்சத்தில், இந்தியாவில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு, படிப்படியாக கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி, சீனா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளின் எண்ணெய் கப்பல்கள் செல்லவும் ஈரான் அனுமதி அளித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. Related Link ஒரு சவரன் தங்கம் ரூ.1,19,760