Also Watch
Read this
மயிலாடுதுறை மாவட்டத்தில், முன்பட்ட குறுவை சாகுபடி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தங்கு தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்கவும், மானிய விலையில் உரங்கள் வழங்கவும், உரிய 'குறுவை தொகுப்புத் திட்டம்' அறிவிக்கவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாயிகளின் இந்த எதிர்பார்ப்புகள் ஈடு செய்யப்படுமா?

குறுவை சாகுபடி...
மயிலாடுதுறை மாவட்டத்தில், நடப்பாண்டு 96 ஆயிரம் ஏக்கரில் முன்பட்ட குறுவை சாகுபடி செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி மற்றும் சீர்காழி ஆகிய 4 தாலுகா விவசாயிகள், தற்போது முன்பட்ட குறுவை நடவுப் பணிகளைத் தொடங்கி உள்ளனர். இந்த நிலையில், ஆட்கள் பற்றாக்குறை காரணமாக நெல் நடவுப் பணிகளில் இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதை அடுத்து, சிலர் இயந்திரங்கள் மூலமும், சிலர் கூலித் தொழிலாளர்கள் மூலம் பாரம்பரிய நடவு பணியிலும் ஈடுபட்டுள்ள நிலையில், சிலர் நேரடி நெல் விதைப்பு செய்துள்ளனர். இவ்வாறு மூன்று வெவ்வேறு முறைகளைக் கையாண்டு விவசாயிகள் முன்பட்ட குறுவைப் பணிகளை செய்து வருகின்றனர்
தண்ணீர் திறக்கப்படுமா?
மயிலாடுதுறை மாவட்டத்தில், தற்போது வரை சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் நடவு பணிகள் நிறைவடைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், மீதமுள்ள வயல்களை நடவுக்கு தயார்படுத்தும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதியன்று மேட்டூர் அணையில் இருந்து காவிரி நீர் திறந்து விடப்படுவது வழக்கம். வழக்கம்போல் இந்த ஆண்டும் தண்ணீர் திறக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடையே அதிகரித்துள்ளது.

விவசாயிகள் வேண்டுகோள்
மயிலாடுதுறை மாவட்டத்தின் காவிரி நீர் செல்லும் ஆறுகள், பாசன மற்றும் வடிகால் வாய்க்கால்கள் ஆகியவற்றில் புதர்கள் மண்டி கிடப்பதுடன், நாணல், கோரை மற்றும் ஆகாய தாமரை அதிகளவில் பரவி காணப்படுவதால், விளை நிலங்களுக்கு தண்ணீர் செல்வதில் பாதிப்பு ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். எனவே, மேட்டூர் அணை திறப்பிற்கு முன்பே நீர்நிலைகளை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்றும், இதனால் மழை வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் தண்ணீரை விரைவாக வடிகட்டி பயிர்களை பாதுகாக்க முடியும் என்றும் விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

குறுவை தொகுப்பு திட்டம்
நிலத்தடி நீரைக் கொண்டு குறுவை சாகுபடி செய்வதை உறுதிப்படுத்த, "தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்கப்பட வேண்டும், இடுபொருட்களின் விலையேற்றத்தைச் சமாளிக்க, விதை நெல், யூரியா மற்றும் இதர உரங்களை மானிய விலையில் வழங்க வேண்டும்" என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கடந்த ஆண்டுகளுக்கான பயிர் காப்பீட்டு தொகையை விவசாயிகளின் வங்கி கணக்கில் உடனடியாக வரவு வைக்க வேண்டும் என்றும், முக்கியமாக குறுவை அறுவடைக்கு ஒரு மாதத்திற்கு முன்பே அரசு கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்றும், ஷெட் அமைத்து நெல் மூட்டைகளை பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, குறுவை தொகுப்பு திட்டத்தை அரசு அறிவிக்கவும் விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved