டிட்வா புயல் வலுவிழந்த நிலையிலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், ஆங்காங்கே மழைநீர் தேங்கியதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். சென்னை, துரைப்பாக்கம் பேருந்து நிறுத்தம் பகுதியில் குளம்போல் மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்கவும், பேருந்துகளில் ஏறுவதற்கு பொதுமக்களும் மிகவும் சிரமப்பட்டனர்.பூந்தமல்லி நெடுஞ்சாலை, வேலப்பன்சாவடி சர்வீஸ் சாலையில் முழங்கால் அளவு தேங்கிய மழைநீரில், வாகனங்கள் சிரமத்துடன் சென்ற நிலையில், கார் மற்றும் தனியார் பேருந்து பள்ளத்தில் இறங்கின.ஆதம்பாக்கம் என்ஜிஓ காலனியில் தேங்கிய மழைநீருடன் கழிவு நீரும் கலந்து துர்நாற்றத்துடன் ஆறாக ஓடும் நிலையில், அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.செங்குன்றம் பகுதியில் மழைநீர் வடிகால்வாய் முறையாக அமைக்கப்படாததால் ஜிஎன்டி சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் வாகனங்களை இயக்கினர்.பெருங்களத்தூர் குட்வில் நகரில் குண்டும் குழியுமாக உள்ள சாலையில் மழை நீரும் தேங்கியுள்ளதால், விபத்து ஏற்படக் கூடும் என்ற அச்சத்துடன் வாகன ஓட்டிகள் வாகனங்களை மிகவும் எச்சரிக்கையுடன் இயக்கினர்.ஈஞ்சம்பாக்கம் அனுமன் காலனி பிரதான சாலையில், ஆங்காங்கே சேதமடைந்து பள்ளங்கள் உள்ள நிலையில், வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் தேங்கியுள்ளது.புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்பு குளம் போல் மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்ற நிலையில், மாணவ, மாணவிகளும் அவதியடைந்தனர்.