Also Watch
Read this
By: Fyrose Banu

மயிலாடுதுறை அருகே பழையகூடலூரில் பெண்ணிடம் குறிசொல்வது போல் ஏமாற்றி தாலிச்சங்கிலி உள்பட தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த குற்றவாளியை தேடிச்சென்று மேல்மருவத்தூரில் தட்டித் தூக்கி கைது செய்த தனிப்படை போலீசாருக்கு எஸ்.பி பாராட்டுகளை தெரிவித்தார்.
யாரோ செய்வினை செய்துள்ளார்கள்
குத்தாலம் தாலுக்கா பாலையூர் காவல் சரகத்துக்கு உட்பட்ட பழையகூடலூர் வடக்கு காலனி தெருவில் ஆசைத்தம்பி என்பவர் மனைவி கண்ணகி(52) மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கடந்த மாதம் 26-ஆம் தேதி குறிசொல்பவர் போல வேடமிட்டு இருசக்கர வாகனத்தில் வந்த நபர் கண்ணகியிடம், உங்கள் வீட்டில் யாரோ செய்வினை செய்துள்ளார்கள். இதனால் உங்கள் வீட்டில் நீண்ட நாட்களாக குடும்ப பிரச்சனை நிலவி வருகிறது என்று கூறியுள்ளார். 
தாலியை கோயிலில் வைத்து பூஜை
செய்வினைக்கு பரிகாரம் செய்ய கண்ணகி கழுத்தில் அணிந்திருந்த தாலிச் சங்கிலியை அருகில் உள்ள கோயிலில் வைத்து பூஜை செய்தால் பிரச்சனை தீரும் என்று கூறியுள்ளார். இதனை நம்பிய கண்ணகி தனது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச்சங்கிலி மற்றும் 1 கிராம் தங்க மோதிரத்தை அவரிடம் கொடுத்துள்ளார். பின்னர், அருகில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு செல்வதாக கூறி சென்ற நபர், ஏமாற்றிவிட்டு நகையுடன் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். இச்சம்பவம் தொடர்பாக கண்ணகி கொடுத்த புகாரின் பேரில் பாலையூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவுபடி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை கைது செய்யவும், திருடு போன சொத்துக்களை மீட்கவும், மயிலாடுதுறை சிறப்பு உதவி ஆய்வாளர் நரசிம்மபாரதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
நகைகளை திருடிக்கொண்டு ஓடிய நபர்
தனிப்படையினர் மேற்கொண்ட விசாரணையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுக்கா குளத்தூர் பரிசல்துறை வண்ணவாடி ரோடு பகுதியை சேர்ந்த பழனி மகன் சுதாகர்(20) என்பதும், அவர் ஊர்ஊராக சென்று இதுபோன்று மோசடிகளில் ஈடுபடுவதும் தெரிய வந்தது. இதையடுத்து, அவரை பல இடங்களில் தேடிய தனிப்படை போலீஸார் மேல்மருவத்தூரில் வைத்து சுதாகரை கடந்த 9-ஆம் தேதி கைது செய்தனர். 
மேல்மருவத்தூரில் வைத்து கைது செய்த போலீசார்
வழக்கில் திருடு போன நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சுதாகர் திருட்டு சம்பவத்திற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார். இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்டு எதிரியை விரைவாக கண்டுபிடித்து அவர் திருடி சென்ற சொத்துக்களை மீட்டெடுத்த மயிலாடுதுறை உட்கோட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் நரசிம்மபாரதி தலைமையிலான தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பாராட்டினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved