தேனி ஆவினில் தரமற்ற இனிப்பு வகைகளை உற்பத்தி செய்ததாக கூறி, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்ததாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என ஆவின் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தேனி ஆவினில் வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே பால்கோவா மற்றும் பாதாம் பவுடர் தயாரிக்கப்படுவதாகவும், இங்கு தீபாவளி பண்டிகைக்கான இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிப்பதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு மற்றும் காரவகைகள் மதுரை மற்றும் திண்டுக்கல் ஆவினில் இருந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. மேலும்,ஆவின் நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காக சிலர் பழைய செய்திகளை பரப்பி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.