Also Watch
Read this
By: Manigandan Raja

220 கிராம் மெத்தபெட்டமைன் கடத்தல் :
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, தமிழக - கர்நாடக எல்லையான ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், சுமார் 220 கிராம்
எடையுள்ள தடைசெய்யப்பட்ட ‘மெத்தம்பேட்டமைன்’ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓசூர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை ஜூஜூவாடி சோதனைச் சாவடியில், காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பெங்களூரில் இருந்து தூத்துக்குடி நோக்கிச் சென்ற அரசு விரைவுப் போக்குவரத்து கழக (SETC) பேருந்தை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். இந்தச் சோதனையில், பேருந்தில் பயணம் செய்த பயணிகளின் உடமைகளை ஆய்வு செய்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த ஒரு நபரின் பையைச் சோதனையிட்டபோது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட உயர்தர போதைப்பொருளான மெத்தம்பேட்டமைன் (Methamphetamine) போதை பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பிடிபட்ட நபர் கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், முகுந்தபுரம் தாலுகா, முரியாடு கிராமத்தைச் சேர்ந்த விஞ்ஜோ (31), என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து சுமார் 220 கிராம் மெத்தம்பேட்டமைன் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட இந்த போதைப்பொருளை சேலத்திற்கு கொண்டு சென்று, அங்கிருந்து கேரளாவுக்கு கடத்திச் செல்ல திட்டமிட்டிருந்தது அம்பலமானது.
இதனைத் தொடர்ந்து விஞ்ஜோவை கைது செய்த காவல்துறையினர், இந்த போதைப்பொருள் கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது? இதன் பின்னணியில் இருக்கும் கும்பல் யார்? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக எல்லையில் நடத்தப்பட்ட இந்த அதிரடி வேட்டை போதைப்பொருள் கடத்தல்காரர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved