மன்னார்குடி அருகே ஓவேல்குடி கிராமத்தில், நெல் கொள்முதல் செய்யாததால், முளைக்க தொடங்கிய நெல் மணிகளால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கு முன்பிருந்தே, குறுவை நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. ஓவேல்குடி கிராமத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு, விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொண்டு வரத் தொடங்கினர். ஆனால், இதுவரை கொள்முதல் செய்யப்பட்ட 20 ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையத்திலேயே அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களுக்கும் மேலாக, நெல் கொள்முதல் நடைபெறாத நிலையில், இப்பகுதியில் பெய்த கன மழையில் நனைந்து நெல் மணிகள் முளைக்க தொடங்கியுள்ளது. 10 ஆயிரம் மூட்டை அளவிற்கு அறுவடை செய்த நெல் வீடுகளிலும், கொள்முதல் நிலையத்திலும் மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. முளைத்த நெல்லை கைகளை ஏந்தி, என்ன செய்வது? என தெரியாமல் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். நெல் மூட்டைகளை விரைவாக கிடங்குகளுக்கு அனுப்பி, நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.