அவிநாசி சாலையில், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரையிலான புதிய மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 10.1 கி.மீ. துாரத்துக்கு ரூ.1,791.23 கோடியில் கட்டப்பட்டுள்ள பாலத்துக்கு கோவையின் புகழ்பெற்ற விஞ்ஞானி ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்பட்டுள்ளது.கோவை, உப்பிலிபாளையம் முதல் நீலாம்பூர் வரையிலான, 16 கி.மீ. கொண்ட அவிநாசி சாலை, இந்நகரின் மத்திய ரேகையாக உள்ளது. இந்தசாலையில் நகரின் முக்கிய பள்ளி, கல்லுாரிகள், மருத்துவமனை, விமான நிலையம் அமைந்துள்ளன. போக்கு வரத்து நெரிசலை குறைக்க, அ.தி.மு.க. ஆட்சியில், அவிநாசி சாலையில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. 2016 ஆக. 4ஆம்தேதி விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.இபிஎஸ் முதல்வராக இருந்தபோது, உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை ரூ.1621 கோடி ஒதுக்கப்பட்டு, 2020 மார்ச் 24ல் நிர்வாக ஒப்புதல் தரப்பட்டது. 2021ல் ஆட்சி மாறிய நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., ஆட்சியில், பாலத்தின் மதிப்பீடு ரூ.1791.23 கோடியாக அதிகரிக்கப்பட்டது.தற்போது பாலத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், ஜி.டி.நாயுடுவின் பெயரை சூட்டியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று, கோவையில் கோல்டுவின்ஸ் பகுதியில் இருந்து, பொது மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.ஜி.டி.நாயுடு மேம்பாலம்... சிறப்பம்சங்கள்...நான்கு வழிப்பாதையான இந்த மேம்பாலத்தில், அண்ணாதுரை சிலை, நவ இந்தியா, ஹோப் காலேஜ், விமான நிலையம் ஆகிய நான்கு இடங்களில், ஏறுதளம் - இறங்குதளம் அமைக்கப்பட்டுள்ளது. பாலத்தின் மத்தியில் 4 அடி அகலத்துக்கு சென்டர் மீடியன் உள்ளது. தமிழகத்திலேயே முதன் முறையாக, மழை நீர் சேகரிப்பு அமைப்பு இந்த பாலத்தில் முன்னோடி முயற்சியாக நிறுவப்பட்டுள்ளது. பாலத்தின் மீது பெய்யும் மழை நீர், குழாய் வழியாக வடிந்து, பாலத்தின் கீழே அமைக்கப்பட்டுள்ள 220 ஆழ்துளை வாயிலாக நிலத்துக்குள் சென்று விடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பாலத்தின் கட்டுமானத்தில் 1.5 மீட்டர் அகல நடைமேடையுடன் கூடிய வடிகால் அமைப்பு 13 ஆயிரத்து 560 மீட்டர் நீளத்துக்கு திட்டமிடப்பட்டு, 9115 மீட்டருக்கு அமைக்கப்பட்டுள்ளது.மதுரை மாவட்டம், ஊமச்சிகுளத்தில் இருந்து நத்தம் வரையிலான 7.5 கிமீ நீளம் கொண்ட உயர்மட்ட மேம்பாலமே, இதுநாள் வரை தமிழகத்தின், மிக நீளமான பாலமாக இருந்தது. தற்போது, உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரையிலான 10.1 கி.மீ. நீளமுள்ள அவிநாசி ரோடு மேம்பாலம் தென்மாநிலங்களின் மிக நீண்ட மேம்பாலம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இதுவரை 45 முதல் 50 நிமிடங்கள் தேவைப்பட்ட நிலையில், இனி இந்த துாரத்தை 10 நிமிடங்களில் கடந்து விட முடியும்.இந்த மேம்பாலத்தை 306 துாண்கள் தாங்குகின்றன. 30 மீட்டர், 40 மீட்டர் இடைவெளியில் துாண்கள் அமைந்துள்ளன. ஹோப் காலேஜ் ரயில்வே மேம்பால பகுதியில் மட்டும், 52 மீட்டர் இடைவெளி விடப்பட்டு உள்ளது.