திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கந்தசஷ்டி திருவிழா தொடங்கிய நிலையில், ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து வருகின்றனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா இன்று யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. கந்த சஷ்டி திருவிழாவின்போது ஏராளமான பக்தர்கள் கோயில் வளாகத்தில் தங்கி, ஒருவேளை உணவு, பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதத்தை தொடங்கினர். குழந்தை பாக்கியம், திருமண தடை நீங்க, தொழில் முன்னேற்றம் ஆகியவற்றிற்காக விரதம் இருந்து வருகின்றனர். விரதம் இருக்கும் பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறியதால், தொடர்ந்து ஆண்டு தோறும் வந்து, கோயிலில் தங்கி விரதத்தை மேற்கொள்வதாகவும் பக்தர்கள் தெரிவித்தனர்.