மதுரை சர்வதேச விமான நிலைய விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு போதுமானதாக இல்லையென சின்ன உடைப்பு கிராம மக்கள் போராடி வரும் நிலையில், அமைச்சர் மூர்த்தி, சாதிய வன்மத்துடன் ஒருமையில் பேசி அவமானப்படுத்தியதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 250க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கும் இடத்தில் வெறும் 64 வீடுகளுக்கு மட்டும் இழப்பீட்டை வழங்கிவிட்டு தங்களது வாயை அடைக்க அமைச்சர் மூர்த்தி முயல்வதாகவும், அப்பகுதி மக்கள் கடுமையாக சாடியுள்ளனர். அநாகரீகமாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு மதுரை சர்வதேச விமான நிலைய விரிவாக்கப் பணிக்காக 633 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில், சின்ன உடைப்பு கிராமத்தில் மட்டும் 18 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. 1999ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 18 ஏக்கர் நிலத்தில் 64 வீடுகளுக்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டு, 2022ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அப்பகுதியில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், வெறும் 64 குடும்பங்களுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கியுள்ளதாகவும், அத்தொகையும் போதுமானதாக இல்லையெனவும் கிராம மக்கள் குற்றம்சாட்டி, தாங்கள் வசித்து வரும் இடங்களை கொடுக்க முரண்டுபிடிக்கின்றனர். இது தொடர்பாக மக்கள் நீதிமன்றத்தில் உரிமை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அமைச்சர் மூர்த்தி பொறுப்பற்ற முறையில் அநாகரீகமாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்தங்கள் பிரச்சனை குறித்து முறையிட அமைச்சர் மூர்த்தியின் வீடு தேடி சென்றவர்களை, அவர் ஒருமையில் பேசி, திட்டி அடித்து விரட்டாத குறையாக நடந்து கொண்டதாக சின்ன உடைப்பு மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அதோடு, தூத்துக்குடி எம்.பி. கனிமொழி தலைமையிலான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கருத்து கேட்க வந்த போது, மனு அளிக்க சென்ற அப்பகுதி மக்களை அமைச்சர் மூர்த்தி அவமானப்படுத்தும் வகையில் பேசியதாகவும் சின்ன உடைப்பு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் அமைச்சர் மூர்த்தியை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அவரது உருவ பொம்மையை எரிக்க முயன்றதை, போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.அவர் என்ன எஜமானரா?தாம்தான் இக்கிராமத்தை காப்பாற்றியதாக அமைச்சர் மூர்த்தி, தம்பட்டம் அடித்து கொள்வதாக ஆதங்கப்படும் மக்கள் அவர் என்ன எஜமானரா? எனக் கேள்வி எழுப்பினர். சாதிய பாகுபாட்டுடன் தங்களிடம் நடந்து கொள்வதாகவும் அவர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். விமான நிலைய விரிவாக்க விவகாரத்தில் போஸ்டர் அடித்து, தனக்கு எதிராக நடந்து கொண்ட ஆத்திரத்தில் சின்ன உடைப்பு ஊரை காலி செய்யும் நோக்கில் அமைச்சர் மூர்த்தி அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாக தேவந்திர குல வேளாளர் மகாசபை நிர்வாகிகள் சாடினர். உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்வீடி தேடி சென்றவர்களை கொட்டும் மழையில் வெளியே நிற்க வைத்து இரவு வரை காக்க வைத்த அமைச்சர் மூர்த்தி, மாமன்ற உறுப்பினரையும், தங்களையும் ஒருமையில் பேசி தாங்கள் கூற வருவதை கூட கேட்காமல் துரத்தியதாகவும் அப்பகுதியை சேர்ந்த பெண் குற்றம்சாட்டினார். அரசின் பல்வேறு திட்டங்கள் வாயிலாக சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் செயலாற்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சாதிய வன்மத்துடன் நடந்து கொண்ட அமைச்சர் மூர்த்தி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். Related Link கோடிகளில் வாங்கிய வீடு ஜீரோ ஆன கதை