Also Watch
Read this
முதலமைச்சர் விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தின் வாத்தி ரெய்டை ரீ கிரியேட் செய்த மதுரை மாநகர் காவல்துறை, 461 கிலோ குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருளை பறிமுதல் செய்தது. விஜயின் மாஸ் திரைப்படங்களை வைத்து போதைப்பொருள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கையில், காவல்துறையினர் ரீல்ஸ் வெளியிட்டுள்ளது, பேசு பொருளாகி உள்ளது.

மதுரை மாநகர் காவல்துறையின் ’ரெய்டு’
சினிமாவில் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை, தனது உள்ளங்கையில் வைத்திருந்த விஜய், அரசியலில் களமிறங்கி முதலமைச்சர் ஆனார். திரையில் ஊழல் அரசியல்வாதிகளையும், வில்லன்களையும் அடித்து துவைத்து மாஸ் காட்டிய விஜயின் பல கதாபாத்திரங்கள் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியதே, விஜயை கோட்டைக்குள் நுழைய வைத்தது. இப்படி இருக்கையில், விஜயின் மாஸ்டர் கதாபாத்திரத்தை ரீ கிரியேட் செய்யும் வகையில், ரெய்டு நடத்தி இருக்கிறது மதுரை மாநகரின் காவல்துறை.

வாத்தி ரெய்டு, மதுரை போலீசார் அசத்தல்
’மாஸ்டர்’ திரைப்படத்தில் சிறுவர்களை போதைப்பொருளுக்கு அடிமைப்படுத்தி அடிதடிக்கு பயன்படுத்தி வந்த வில்லனை எப்படி விஜய் ஒழித்தாரோ, அதேபோல தான் காவல்துறை அதிரடியாக ரெய்டை நடத்தி உள்ளது. வாத்தியார் கதாபாத்திரத்தில் விஜய் ரெய்டு நடத்தி போதைப் பொருட்களை பறிமுதல் செய்ததை போல், மதுரை போலீசாரும் வாத்தி ரெய்டு நடத்தி, குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்களை பறிமுதல் செய்து உள்ளனர்.

11 பேர் மீது வழக்கு
கடந்த 10ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் 461 கிலோ குட்கா புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கவனிக்க வைத்த செயல்பாடு
முதலமைச்சராக பொறுப்பேற்றதும் விஜய், போதைப் பொருளை ஒழிப்பதிலேயே முழு கவனத்தை செலுத்தி வரும் நிலையில், மதுரை மாநகரின் காவல்துறையின் இந்த செயல்பாடு கவனிக்க வைத்து உள்ளது. முதலமைச்சர் விஜய் மாஸ்டர் பிஜிஎம் போட்டு, ரீ கிரியேட் செய்ததன் மூலம் போதைப் பொருளை விற்கும் குற்றவாளிகளை தடுக்கவும், மக்களிடம் நடவடிக்கையை கொண்டு சேர்க்கும் வகையிலும், அமைந்ததாகவே பார்க்கப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved