Also Watch
Read this
சோஷியல் மீடியா மூலமும், குழந்தைகளை பிரச்சாரம் செய்யவைத்தும் தவெக ஆட்சியில் அமர்ந்திருப்பதாக மு.க.ஸ்டாலின் சாடி உள்ளார். கணிக்கத் தவறி விட்டதாக சோர்ந்து போய்விடாமல், இனி தெளிவாக இருந்து உழைத்தால் அடுத்த ஆட்சி திமுக ஆட்சிதான் என்றும் பேசி உள்ளார்.

தஞ்சாவூரில் மு.க.ஸ்டாலின்
தஞ்சையில், திமுக நிர்வாகி பூண்டி கலைவாணன் இல்ல திருமண நிகழ்வில் கலந்து கொண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி இருப்பதாவது;
வெற்றி, தோல்வி இரண்டையும் சமமாக கருதி பாடுபடும் இயக்கம் திமுக. நடந்து முடிந்த தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்துவிட்டதை போல, இத்துடன் திமுக முடிந்துவிட்டது என இரங்கற்பா பாடுவதற்கு சிலர் முன் வந்துள்ளனர். நம்முடைய இன எதிரிகள் அந்த சூழ்ச்சியில் ஈடுபட்டு உள்ளனர். இதுவரை எத்தனையோ தேர்தல்களை திமுக பார்த்துள்ளது. 1949ல் தொடங்கிய திமுக, பல தேர்தல்களை சந்தித்து வெற்றி, தோல்வியை பெற்றுள்ளது.

பீனிக்ஸ் பறவையாக...
தோல்வி அடையும் போது தான் திமுக, ஃபீனிக்ஸ் பறவையாக எழுந்து உள்ளது. இங்கே பேசியவர்கள், மேடையில் உள்ளவர்கள், எதிரில் உள்ளவர்கள் அனைவரும் சோகமாக இருப்பதுபோல் உள்ளனர். நாம் சோகமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் தான் இன்றைக்கும் ஆட்சியில் உள்ளோம். ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது எல்லா தரப்பு மக்களுக்கும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியது திமுக அரசு. நாம் வெற்றி வாய்ப்பை இழந்து, புதிய ஆட்சி அமைந்தபோது, அவர்களுக்கு வாழ்த்து சொன்னேன். அப்போது, ‘திமுக நிறைவேற்றிய திட்டங்களை தொடர வேண்டும்’ எனச் சொன்னேன். தற்போது, நாம் வைத்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருப்பதை கண்கூடாகப் பார்க்கிறோம். அதனால்தான் இப்போதும் நாம் தான் ஆட்சியில் இருக்கிறோம் என்று கூறினேன்.

ஏன் ஆட்சிக்கு வர முடியவில்லை?
தேர்தலுக்கு முன்பாக மக்களை சந்தித்து பல்வேறு பணிகளை திமுக செய்தது. ஆனாலும், ஏன் ஆட்சிக்கு வர முடியவில்லை? தேர்தலுக்கு எந்தப் பணிகளையும் செய்யாமல், மக்களை கூட சந்திக்காமல், பாக முகவர்கள், பூத் ஏஜெண்டு, வாக்கு எண்ணும் ஏஜெண்டு கூட நியமிக்காமல் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துள்ளார்கள். அது தவறு இல்லை.

கருத்துக்களை கூறலாம்
நாம் செய்த சாதனைகளை எல்லாம் யாராலும் மாற்றிவிட முடியாது. நாம் கொண்டு வந்த இந்த திட்டங்கள் நடக்கும் வரை திராவிட மாடல் தான் தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும். இந்த தேர்தலில் தோல்வி அடைந்ததும் நான் சோர்வு அடையவில்லை. நாம் எப்படி வெற்றி வாய்ப்பை இழந்தோம் என்பதை ஆராய ஒரு குழுவை அமைத்து உள்ளோம். அந்த ஆய்வின் போது, நம்மிடம் என்ன பிரச்சினை, என்ன குறை? என்று கேட்டறியப்படும். இதற்காக ஒரு இணைய தளமும் தொடங்கி உள்ளோம். அதில் அனைத்து தரப்பினரும் தங்கள் கருத்துகளை கூறலாம்.

சமூகவலை தளம் தான் காரணம்
அவர்களின் வெற்றிக்கு காரணம் சமூக வலைதளம். இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி குழந்தைகளை பிரச்சாரம் செய்ய வைத்து, அவர்களின் வீட்டில் உள்ள பெரியவர், பெற்றோரிடம் பிரச்சாரம் செய்ய வைத்து திட்டமிட்டு வாக்களிக்க வைத்து ஆட்சிக்கு வந்து உள்ளனர். அது நம் கண்ணுக்கு தெரியாமல் போய்விட்டது. இனி, நாம் உஷாராக இருந்து அதையும் முறியடிக்க திட்டங்களை தீட்டி உள்ளோம். நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. மீண்டும் நாம் தான் ஆட்சிக்கு வருவோம் என்று பணியாற்றுங்கள்.

எதிர்க்கட்சியாக சிறப்பாக செயல்படுவோம்
நாம் இன்னும் 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்திருந்தால், பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி இருக்கலாம். ஆனாலும், எதிர்க்கட்சியாக சிறப்பாக செயல்படுவோம்.
இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved