சென்னையை அடுத்த எண்ணூரில், காளி சிலையை ஊருக்குள் கொண்டு வர எதிர்ப்பு தெரிவித்து, ஒட்டுமொத்த மீனவ கிராமமே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பொதுவான கருத்து முன்னோர்களால் சொல்லப்படுவதுண்டு. ஆனால், இங்கு ஒரு கோயிலுக்கு எதிராக மொத்த ஊரும் அணிதிரண்டு போராடும் விநோத காட்சி...சென்னையை அடுத்த எண்ணூர், நெட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவர் கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்தில் காளி சிலை ஒன்றை தனது வீட்டு வளாகத்திலேயே கோயில் போன்ற அமைப்பை ஏற்படுத்தி பிரதிஷ்டை செய்ததாக தெரிகிறது. கார்த்தி பிரதிஷ்டை செய்த காளி சிலை, பார்ப்பதற்கு அச்சமூட்டும் வகையில் உக்கிரமாக காணப்பட்டது. இதைப் பார்த்து பயந்து போன அப்பகுதி மக்கள் சிலை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், அதையும் மீறி கார்த்திக் அந்த சிலையை வைத்து வழிபட்டு வந்துள்ளார்.இந்நிலையில் தான், காளி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட அடுத்த சில தினங்களில் அந்த கிராமத்தை சேர்ந்த 7 பேர் எதிர்பாராத விதமாக அடுத்தடுத்த விபத்துகளில் சிக்கி உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் சொல்லப்படுகிறது. எதிர்பாராமல் நேர்ந்த மரணத்திற்கெல்லாம் காளி சிலையும் கார்த்திக் செய்யும் மாந்தீரிகமும் தான் காரணம் என்று பகீர் கிளப்பப்பட்டதால் மக்கள் பீதியில் ஆழ்ந்தனர். ஒரு கட்டத்தில் காளி சிலையை அகற்ற சொல்லி ஊரே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு தாசில்தாரிடம் முறையிட்ட நிலையில், சிலை வைத்த ஒரு மாதத்திலேயே காவல்துறையினர் அதனை அகற்றியதாக கூறப்படுகிறது.சிலையின் உரிமையாளரான கார்த்திக், தனது தனி உரிமை விவகாரத்தில் போலீசாரும் அரசு நிர்வாகிகளும் அத்துமீறி தலையிட்டு சிலையை பறிமுதல் செய்ததாக கூறி, நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றமும் சிலையை திருப்பி ஒப்படைக்க உத்தரவிட்டது. ஆனால், தாசில்தார் தரப்பு சிலையை ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தியதால் கார்த்திக், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடுத்திருந்தார். அதிகாரிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய நீதிபதியும், சிலையை ஒப்படைக்க சொல்லி கெடு விதித்து உத்தரவிட்டார்.நீதிமன்றம் விதித்த கெடுவின் இறுதி நாளில், சிலையை கார்த்தியிடம் ஒப்படைத்த தாசில்தார் பெரும் போலீஸ் படையுடன் அவரை ஊருக்குள் அழைத்து சென்றது. இந்த தகவலை முன்கூட்டியே அறிந்த ஊர் மக்கள் கருப்பு துணியை முகத்தில் கட்டிக் கொண்டும், வீடுகளில் கருப்பு கொடியை பறக்கவிட்டும் ஊர் எல்லையில் அமர்ந்து மிகப்பெரிய அளவில் போராட்டத்தை முன்னெடுத்தனர். நிலைமை மேலும் பதற்றமானதால் கார்த்தியிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஊர் மக்களின் அச்சத்தையும் உணர்வையும் புரிந்து கொண்ட சிலையின் உரிமையாளரான கார்த்திக்கும், சிலையை தனக்கு சொந்தமான வேறொரு இடத்தில் வைப்பதாக ஒப்புக்கொண்டதால் போலீசார் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.