திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே தொடர் கனமழையால், சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. கடந்த சில தினங்களாக இரவு நேரத்தில் கொட்டித்தீர்த்து வரும் கனமழையால், செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆவணியாபுரம் அணைக்கட்டு அருகே கொருக்காத்தூர் செல்லும் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு, விளைநிலங்களில் வெள்ளம் புகுந்தது. கொருக்காத்தூர், மணலவாடி, நாவல்பாக்கம், பில்லாந்தி, வண்ணாத்தாங்கல், தேவானூத்தூர் ஆகிய கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.