Also Watch
Read this
காங்கிரஸ் கட்சியில் பாதி பேரை பைக்குள் போட்டுக்கொண்டு பாதி கதர்களுடன் கல்லாப்பெட்டி கூட்டணியை திமுக அமைத்துள்ளதாக தவெக தலைவர் விஜய் சாடி உள்ளார். அதிமுகவை, மற்றும் பலர் கூட்டணி என்றதோடு, பாஜக உடன் கூட்டு சேர்ந்ததால், பாதிக்காவி கூட்டணி ஆகி விட்டதாகவும் விஜய் விமர்சனம் செய்து உள்ளார்.

திருச்சியில் விஜய்
திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு விஜய் பிரச்சாரத்தை தொடங்கினார். தன்னை 100 சதவீதம் நம்பி தனக்கு ஒரு வாய்ப்பு வழங்குமாறு இருகரம் கூப்பி மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். கரூர் நிகழ்ச்சி எப்படி ஒரு சூழ்ச்சியோ, அதேபோல், ஜனநாயகன் பட வெளியீட்டுக்கும் கூட்டு சதி நடைபெறுகிறது. திமுக வேறு, பாஜக வேறு அல்ல இரண்டுமே ஒன்று தான் என்றும் தவெக தலைவர் விஜய் ஆவேசமாக பேசினார்.

திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய்
பெரம்பூர் தொகுதியை தொடர்ந்து, திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட விஜய் இன்று ஏப்ரல் 2ஆம் தேதி, விமானம் மூலம் சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்தார். பின்னர் தொண்டர்கள் படை சூழ பிரச்சார வாகனத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரியை சந்தித்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்த விஜய், அருகில் இருந்த எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

வாக்குறுதிகள் என்ன ஆச்சு?
பின்னர் திறந்தவெளி பிரச்சார வாகனத்தில் நின்று தவெக தலைவர் விஜய் பேசியதாவது;
காஸ் பிரச்சினை எப்படி உள்ளது? காஸ் பிரச்சினையால் சிறிய அளவிலான டீ கடைகள் முதல் உணவகங்கள் வரை பாதிப்பை சந்தித்துள்ளன. ஒரு போர் மூலம் இப்படி ஒரு சூழல் ஏற்படும் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. இவருக்கு ஒரு பிரச்சனை என்றால் விமானத்தில் டெல்லி சென்று வரும் முதல்வர், காஸ் தட்டுப்பாட்டை போக்க டெல்லிக்கு போய்ட்டு வந்து இருக்கலாமே?

இவர்கள் எப்போது சொன்னதை செய்துள்ளனர், அனைத்தும் வெற்று அறிக்கை மட்டுமே. இவர்கள் 2021ல் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளையே முழுமையாக நிறைவேற்றவில்லை. காஸ் சிலிண்டருக்கு மானியம், கரும்புக்கு ஆதார விலை, ரேஷனில் சர்க்கரை, உளுந்து கூடுதலாக வழங்கல், இப்படி திமுகவின் பொய் வாக்குறுதிகளை அடுக்கிக்கொண்டே போகலாம். எவ்வளவு முறை சொல்வது, இருப்பதிலேயே மிக பெரிய பொய் வாக்குறுதி, நீட் தேர்வு ரத்து.

திமுக வேறு, பாஜக வேறு அல்ல
இவர்கள் ஆட்சியில் அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் கூட இருப்பதில்லை. ஏன்? ஒரு கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் இயற்கை உபாதையை கழிக்க வெளியே சென்ற பிளஸ்-2 மாணவி கொலை செய்யப்பட்ட அவல நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது. இதே திருச்சியை சேர்ந்த அமைச்சர், அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.12,000 கோடி ஊழல் செய்து உள்ளார். கரூர் நிகழ்ச்சி எப்படி ஒரு சூழ்ச்சியோ, அதேபோல், ஜனநாயகன் பட வெளியீட்டுக்கும் கூட்டு சதி நடைபெறுகிறது. திமுக வேறு, பாஜக வேறு அல்ல, இரண்டுமே ஒன்றுதான்.

தவெக தேர்தல் வாக்குறுதி
ஏப்ரல் 23ம் தேதி உங்களுக்கான தேர்தல், வசதியான வாழ்க்கையை உதறி விட்டு உங்களுக்காக வந்துள்ள எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். அதோடு, திருச்சி மாவட்டத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் அனைவரையும் வெற்றி பெறச் செய்யுங்கள். தவெக வேட்பாளர்கள் வேறு, நான் வேறு அல்ல.
இவ்வாறு விஜய் பேசி, வாக்கு சேகரித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved