Also Watch
Read this
By: Fyrose Banu

பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட 1வது வார்டில் குன்னமஞ்சேரி,இந்திரா நகர் பகுதியில் தொழு நோயாளிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசால் ஒதுக்கப்பட்ட நிலத்தில் வீடுகள் கட்டி 40 ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 60 குடும்பத்திற்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
தொழுநோயாளிகள் வசிக்கும் தெருவின் அவலம்
வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தெருவில் சரியாக நடக்க முடியாமல் கஷ்டப்படும் மனிதர்கள் வசிக்கும் இந்த தெருவிற்கு சிமெண்ட் சாலை அமைத்துக் கொடுக்க வேண்டி பொன்னேரி நகராட்சி மன்றத்தில் பல முறை மனு கொடுத்து வந்துள்ளனர்.
அரை மணி நேரத்தில் போடப்பட்ட சாலை
ஆனால் இதுவரை அவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாமலேயே இருந்தது. இந்நிலையில் தேர்தல் அறிவிக்கப்படும் சூழல் உள்ளதால் அதனை கருத்தில் கொண்டு நேற்று அந்த தெருவிற்கு அரை மணி நேரத்தில் அவசரகதியில் தார் சாலை போடப்பட்டது.
இந்த தெருவுக்கு இதுவே அதிகம்
தார் சாலை போடும்போது அங்கிருக்கும் மக்கள் ஏன் இவ்வளவு அவசர கதியில் இந்த சாலையை போடுகிறீர்கள் நாங்கள் சிமெண்ட் சாலை தானே கேட்டோம், ஆனால் இந்த சாலை போடுகிறீர்களே அதுவும் தரம் இல்லாமல் போடுகிறீர்கள் என கேட்கும் போது உங்கள் தெருவுக்கு இதுவே அதிகம் எனவும் இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது போய் நகராட்சியில் கேளுங்கள் எனவும் அலட்சியமாக பதில் சொல்லியதாக கூறபடுகிறது.

அப்பளம் போல் நொறுங்கும் சாலை
உடனே அப்பகுதி மக்கள் தரமற்ற சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு ஒன்றை தயார் செய்து நகராட்சி ஆணையரிடம் அளித்துள்ளனர். ஆனாலும் நகராட்சி நிர்வாகம் இதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அவசரகதியில் அரை மணி நேரத்தில் போடப்பட்ட சாலை தற்போது அப்பளம் போல பெயர்ந்து வருகிறது.
எச்சரிக்கும் தொழுநோயாளிகள்
தொட்டாலே சாலை பெயர்ந்து விழும் தரமற்ற முறையில் போடப்பட்டுள்ளதால் அதில் நடக்கும் மாற்றுத்திறனாளிகளும் தொழு நோயாளிகளும் மிகவும் சிரமப்பட்டு நடந்து செல்கின்றனர். உண்மையிலேயே முடியாதவர்கள், கஷ்டப்படுபவர்கள் வாழும் இந்த பகுதிக்கு இதுபோன்ற தரமற்ற சாலை அமைத்துக் கொடுத்த ஒப்பந்ததாரர் மீதும் பொன்னேரி நகராட்சி நிர்வாகம் மாவட்ட நிர்வாகம் ஆய்வு நடவடிக்கை எடுக்க வேண்டும் எடுக்காத பட்சத்தில் போராட்டத்தில் ஈடுபடுவதாக தொழு நோயாளிகள் எச்சரித்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved