புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் செல்போன் பேசிய படி அரசுப்பேருந்தை இயக்கியதாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஓட்டுநர், மீண்டும் பணியில் சேர்ந்த அடுத்த நாளே ஆளுங்கட்சியின் துண்டை அணிந்துகொண்டு ஒழுங்கீனத்தில் ஈடுபட்டதால் பயணிகள் அச்சமடைந்தனர். கந்தர்வக்கோட்டையிலிருந்து தஞ்சாவூருக்கு செல்லும் D-60 என்ற நகரப்பேருந்தை இயக்கி வந்த ஓட்டுநர் ராஜன், செல்போன் பேசிக்கொண்டே பேருந்தை இயக்கிய புகாரில் 4 நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனிடையே மீண்டும் பணியில் சேர்ந்த அவர், திமுக துண்டை அணிந்துகொண்டு செல்போன் பேசிக்கொண்டே பேருந்தை இயக்கி பயணிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தினர்.