Also Watch
Read this
Posted on: Mar 16, 2026 09:15 AM
By: Fyrose Banu

மேலூர் பகுதியில் ஒரே நாளில் கேரளாவைச் சேர்ந்த பெண்கள் உட்பட 4 பேரிடம் உரிய ஆவணங்கள் இன்றி பணம் எடுத்துச் செல்லப்பட்ட 8.45 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.
தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை
மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்
இந்நிலையில், மேலூர் அருகே அ.வல்லாளபட்டி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை மேற்கொண்ட போது, திண்டுக்கல்லைச் சேர்ந்த ரியல்எஸ்டேட் அதிபர் சந்திரசேகர் என்பவர் காரில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.4 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல், கொட்டாம்பட்டி பகுதியில் சேவுகமூர்த்தி என்பவரிடமிருந்து ரூ.71 ஆயிரம் பணமும், மேலூர் பகுதியில் பெரியசாமி என்பவரிடம் இருந்து ரூ.1.34 லட்சம் பணமும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.
ஒரே நாளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.8.45 லட்சம்
மேலும், இன்று காலை கேரளா திருவனந்தபுரத்தைச் சேர்ந்த குமாரி என்பவர் நகை வாங்குவதற்காக காரைக்குடிக்கு கொண்டு சென்ற ரூ.2.40 லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்ட ஒரே நாளில் மேலூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் மொத்தம் ரூ.8 லட்சத்து 45 ஆயிரம் பணம் உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்றதாக தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு, மேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், அதனை வட்டாட்சியர் முத்துப்பாண்டி ஆய்வு செய்து மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.மேலும், தேர்தல் விதிமுறைகள் காரணமாக உரிய ஆவணமின்றி அதிகளவு பணம் எடுத்துச் செல்லும் நபர்களுக்கு எதிராக தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மேலூர் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved