Also Watch
Read this
Posted on: Mar 17, 2026 06:30 AM
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே ஆள் அரவமற்ற காட்டுப் பகுதியில், காருக்குள் கருகிய நிலையில் 4 உடல்கள் மீட்கப்பட்ட தகவல் அதிர்ச்சியில் உறைய வைத்து உள்ளது. விபத்தில் சிக்கி கார் தீப்பிடித்து எரிந்ததா? அல்லது கொலை செய்யப்பட்டனரா? என்று, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
கார் தீப்பற்றி எரிந்து கொடூர விபத்து
நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே ஆத்தங்கரை பள்ளிவாசல் சாலையில், கார் ஒன்று மர்மமான முறையில் முழுமையாக எரிந்து சாம்பலான சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திசையன்விளை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆத்தங்கரை பள்ளிவாசல் செல்லும் சாலையில், கார் ஒன்று தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதாக, இன்று காலை காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கார் முற்றிலும் உருக்குலைந்த நிலையில் எரிந்து கிடப்பதைக் கண்டனர்.
திடுக்கிடும் தகவல்கள்
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. எரிந்த நிலையில் உள்ள காரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 நபர்கள் இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அப்பகுதி மக்களிடம் நடத்திய விசாரணையில், கார் விபத்துக்குள்ளான காரணத்தினால் தீப்பற்றி எரிந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும், காரில் இருந்தவர்கள் யார்? அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.
விபத்தா? சம்பவமா?
இந்த விபத்து தற்செயலாக நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் பின்னணி காரணங்கள் உண்டா? என்ற கோணத்தில் காவல்துறை விசாரணையை முடுக்கி விட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். காரின் பாகங்கள் மற்றும் அங்குள்ள தடயங்களைச் சேகரித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரின் பதிவு எண்ணை வைத்து உரிமையாளர் விவரங்களைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த கோர சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விரிவான விசாரணைக்கு பின்னரே விபத்துக்கான முழுமையான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved