Also Watch
Read this
By: Manigandan Raja
அடுத்த 5 ஆண்டுகளில், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான கனவுத் திட்டங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். 'தமிழ்நாடு 2030, கனவுகள் மெய்ப்படும்' என்ற தலைப்பில் கல்வி, தொழில், விவசாயம் என்று, 14 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

'தமிழ்நாடு 2030, கனவுகள் மெய்ப்படும்'
சென்னையில் நடைபெற்ற விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை;
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில், மிக மிக முக்கியமான நாளாக மார்ச் 6ம் தேதி அமையப் போகிறது. மண்ணும் மக்களும் மாநிலமும் பயன்பெற தேவையான திட்டங்களை உருவாக்கவே உங்களை அழைத்துள்ளேன். கடந்த 5 ஆண்டுகளில் திராவிட மாடல் அரசு ஒவ்வொரு துறையிலும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணி ஆற்றி உள்ளது. சொல்ல முடியாத அளவுக்கு மலை அளவு சாதனைகளை செய்து உள்ளோம். அமைச்சர்களுக்கு வாழ்த்து, பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். 5 ஆண்டுகளில் மக்கள் அடைந்திருக்கும் மகிழ்ச்சி தான், நான் மகிழ்ச்சியாக இருக்க காரணம். ஆட்சிக்கு வரும்போது இவ்வளவு திட்டங்களை நிறைவேற்ற முடியுமா? என்ற ஏக்கம் இருந்தது.

பயனடையாத குடும்பங்களே இல்லை
தமிழக அரசின் திட்டங்களால், தமிழ்நாட்டில் பயன் அடையாத குடும்பங்கள் இல்லை. தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய அனைத்து திட்டங்களுமே தேவையானவை, சிறப்பானவை. அரசியல், நிதி நெருக்கடிகளால் திட்டங்கள் நிறைவேற்றுவதில் நிறைய முட்டுக்கட்டை இருந்தன. 5 ஆண்டுகளில் என்னுடைய கனவுகளில் பெரும்பாலான கனவுகளை நிறைவேற்றி விட்டேன்.
முதல்வரின் அறிவிப்புகள்
* தமிழ்நாட்டில் 2030க்குள் கிராமப்புறங்களில் 5 லட்சம் நகர்ப்புறங்களில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2 லட்சம் வீடுகள் என்று, மொத்தமாக 7 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்
* நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் நோய்களை கண்டறிய சிறப்பு முகாம் நடத்தப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மனநல ஆலோசனை மையம் அமைக்கப்படும்.
* நிகர சாகுபடி பரப்பு 50 லட்சம் ஏக்கராக உயர்த்தப்படும். மேற்கு, கிழக்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் 1,000 மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் கட்டப்படும்.
* 125 லட்சம் மெட்ரிக் டன்னாக உணவுப்பொருள் உற்பத்தி உயர்த்தப்படும்.

* அனைத்து அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 100% ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்படும். ஆயிரம் மாதிரி பள்ளிகள் உருவாக்கப்படும். நான் முதல்வன் திட்டம் 2.0 மூலம் கூடுதல் திறன் பயிற்சி வழங்கப்படும்.
* ஒவ்வொரு கல்வி நிலையத்திலும் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
* அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டம் விரிவுபடுத்தப்படும். கிராமங்களை பெருளாதார வளர்ச்சி மையங்களாக மாற்றுவோம்.
* உலக அளவில் தமிழ்நாட்டு இளைஞர்கள் போட்டி போடும் அளவுக்கு கூடுதல் திறன் பயிற்சி வழங்கப்படும்.
* 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதே எங்கள் இலக்கு.
* தேவைப்படும் இடங்களில் சமூக நீதி விடுதிகள் அமைக்கப்படும்.

* ஜவுளி ஆடை, தோல் போன்ற துறைகளில் பயிற்சி வழங்கப்பட்டு பொருளாதார முன்னேற்றம் உறுதிபடுத்தப்படும்.
* சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும். சிறுபான்மை சமூகத்தினர் தொழில் தொடங்க கடன் வசதிகள் எளிமைப்படுத்தப்படும்.
* வீட்டு மனையற்ற ஒவ்வொரு ஆதிதிராவிடர், பழங்குடியினர் குடும்பங்களுக்கும் 2030க்குள் வீட்டு மனைப் பட்டா வழங்கப்படும்.
* நகர்ப் புறங்களுக்கு இணையான வசதிகளுடன் கிராமப்புறம் வளர்த்து எடுக்கப்படும். முதல் கட்டமாக 10 ஊராட்சிகளில் தற்போதே உத்தமர் காந்தி மாதிரி கிராம திட்டம் செயல்படுத்தப்படும்.
* ஐடி ஏற்றுமதி ரூ.6 லட்சம் கோடியாக 2 மடங்கு உயர்த்தப்படும்.
* மாவட்டம் தோறும் நவீன தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும்.

* கடல் கூண்டு மீன் வளர்ப்புத் திட்டத்தை விரிவுபடுத்துவோம். புதிய மீன் பண்ணைகள் அமைக்கப்படும்.
* மீன் உற்பத்தியை 200 டன்னில் இருந்து 400 டன்னாக உயர்த்துவோம். ஒரு லட்சம் ஏக்கரில் தீவன உற்பத்தி திட்டம் செயல்படுத்தப்படும்.
* திடக்கழிவு மேலாண்மையில் புதிய மாற்றங்கள் செய்யப்படும்.
* கால்நடைகளின் எண்ணிக்கையை 3 கோடியாக உயர்த்துவோம்.
* அனைத்து மாநகராட்சிகளிலும் நவீன கலாச்சார மையங்கள் அமைக்கப்படும்.
* அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளில் முழுமையான மழை நீர் வடிகால் அமைப்பு உருவாக்கப்படும்.

* 2030க்குள் ஆண்டுக்கு தினமும் 4.5 கோடி லிட்டர் பால் உற்பத்தி என்ற இலக்கோடு செயல்படுவோம்.
* சிறு, குறு,நடுத்தர நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் பன்னாட்டு கண்காட்சி நடத்தப்படும்.
* கோயில் நகரங்கள், கடலோர சுற்றுலா தலங்களுக்கு செல்லக்கூடிய சாலைகள் மேம்படுத்தப்படும்.
* நெசவாளர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த புதிய தொழில் நுட்பங்கள் அமல்படுத்தப்படும்.
* தமிழ்நாட்டின் கைத்தறி வகைகள் சர்வதேச கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும்.
* நமது நாடே சமத்துவபுரமாக ஆக வேண்டும் என்பதே எனது கனவு.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved