Also Watch
Read this
By: Manigandan Raja

சூட்கேஸின் அடியில் வைத்து மறைத்து கடத்தி வந்தது அம்பலம் :
தாய்லாந்தில் இருந்து இலங்கை திரும்பிய புத்த பிட்சுக்களிடம் இருந்து 110 கோடி ரூபாய் மதிப்பிலான 110 கிலோ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாங்காங்கில் இருந்து இலங்கை பண்டார நாயக்கா விமான நிலையம் திரும்பிய 22 புத்த பிட்சுகளிடம் போதை பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது, ஒவ்வொரு புத்த பிட்சுவின் சூட்கேஸுக்கு அடியிலும் 5 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்களை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இலங்கை வரலாற்றில் இதுவே மிகப்பெரிய போதை பொருள் பறிமுதல் சம்பவம் எனக் கூறப்படுகிறது.
எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடிய வழக்கறிஞர் :

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக வாதாடிய பெண் வழக்கறிஞர் வர்ஜினியா லீ கியூஃப்ரோவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை முன்பாக எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களும், சமூக ஆர்வலர்களும் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினர். எப்ஸ்டீன் குற்றங்களை அம்பலப்படுத்தி அவரது முகத்திரையை கிழிக்க போராடிய அவரை பெருமைப்படுத்தும் விதமாக இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
டிரம்ப் நிர்வாகத்தையும், ஊடகத்தையும் விமர்சித்து போராட்டம் :

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில், டிரம்ப் நிர்வாகத்தையும், ஊடகத்தையும் விமர்சித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்க மீடியாக்கள் நடுநிலைத் தன்மையுடன் செயல்படுவதில்லை என குற்றம்சாட்டிய மக்கள், காசாவில் நடக்கும் இன படுகொலைகள் குறித்த செய்திகளை ஏன் வெளியிடவில்லை என கேள்வி எழுப்பி பதாகைகளை ஏந்தி நின்றனர்.
ஈரானின் 160 மாணவர்களை கொன்ற ஒரு போர்க்குற்றவாளியான பாதுகாப்புத்துறை அமைச்சர் ஹெக்செத்தை விருந்துக்கு அழைத்துள்ளதாக சாடினர்.
இஸ்ரேல் ராணுவத்திற்கு பிரதமர் நெதன்யாகு உத்தரவு :

லெபனானில் போர்நிறுத்த ஒப்பந்தங்கள் மீறப்பட்டதாக கூறி, ஹிஸ்புல்லா இலக்குகள் மீது மிக கடுமையான தாக்குதல்களை நடத்துமாறு இஸ்ரேல் ராணுவத்திற்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.
ஹிஸ்புல்லா அமைப்பினர் வடக்கு இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, அந்த அமைப்பின் நிலைகளை தகர்க்க இஸ்ரேல் பாதுகாப்பு படைகளுக்கு நெதன்யாகு பச்சைக்கொடி காட்டியுள்ளார். இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய வான்வழி தாக்குதல்களால் தெற்கு லெபனானின் பல பகுதிகளில் கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது.
நிலப்பிரச்சனை தொடர்பாக தகராறு :
இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், நிலப்பிரச்சனை தொடர்பாக பெண்களிடம் துப்பாக்கி காட்டி மிரட்டிய வீடியோ வைரலாகியுள்ளது. யாழ்ப்பாணம் பெரியவிளான் பகுதியில் உள்ள நிலம் தொடர்பாக, இலங்கை எம்.பி. அருச்சுனாவிற்கும் அங்குள்ள மற்றொரு தரப்பினருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நிலத்திற்கு சென்று சுத்தம் செய்ய முயன்ற எம்.பி. அரச்சுனாவிற்கும், அங்குள்ள இரு பெண்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.. அப்போது, கோபம் அடைந்த அருச்சுனா, தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அந்த பெண்களிடம் காண்பித்து மிரட்டல் விடுத்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved