இருள் சூழ்ந்த வானில், பார்க்க ரம்மியமாக காட்சியளிக்கும் நிலவு, துருப்பிடிக்க தொடங்கியுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நிலவு துருப்பிடிக்க என்ன காரணம்? அதனால் வரும் பாதிப்பு என்ன ? நிலவின் தன்மை மாறுவதற்கு காரணம் இயற்கை நிகழ்வா? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.நாம் வாழும் இந்த உலகம், பல அதிசயம், ஆச்சரி்யங்களை கொண்டது. பூமி எப்படி உருவனது, உயிரினங்கள் எப்படி வந்தது, பிரபஞ்சத்தோட ரகசியம் என்ன? என்ற பல கேள்விகளுக்கு, மனிதரோட தேடல் தொடர்ந்து கொண்டே வருகிறது. ஒவ்வொரு நாடும், விண்வெளியில் தனக்கான கேள்விக்கு, விடையை தேடிக் கொண்டிருக்கிறது. இந்த தேடலில் தான், பூமிக்கு மிக நெருக்கமான நிலவு பற்றி அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பூமியை தொடர்ந்து, நிலவில் மனிதர்கள் வசிக்க முடியுமா? என்ற கேள்விக்கான விடையை தேடி, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள், செயற்கை கோள்களை அனுப்பி ஆய்வு செய்து வருகின்றன. இந்த ஆய்வில், நிலவில் சத்தமே இன்றி, மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதாக, தெரிய வந்துள்ளது. அதாவது, நிலவின் துருவப் பகுதியில் துருப்பிடிக்க ஆரம்பித்து உள்ளதாம். இரும்பு ஆக்சைடின் வடிவமனான ஹேமடைட், அதாவது துருப் படலம் உருவாகி வருகிறது. இதனால் நிலவு துருப்பிடிக்க ஆரம்பித்து இருப்பதாக கூறும் விஞ்ஞானிகள், தொடர்ந்து அடுத்தகட்ட ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். அதே நேரம் நீர், ஆக்சிஜன் இருந்தால் மட்டுமே, துருப் பிடித்தல் நிகழ்வு நடக்கும். நிலவில், இது இரண்டுமே இல்லையே என நினைத்த ஆய்வாளர்கள், துருப் பிடித்தலுக்கான காரணத்தை தேடி உள்ளனர். இதுகுறித்து, சீன விஞ்ஞானி சிலியாங்க் ஜென், விளக்கம் தந்துள்ளார்."அதாவது, நிலவு துருப்பிடிக்க பூமியே காரணம். சூரியனிடம் இருந்து வரும் சார்ஜ் செய்யப்பட்ட துகள் பூமிக்கும், நிலவுக்கும் வருகிறது. ஒவ்வொரு மாதமும் 5 நாட்கள் சூரியனுக்கும் நிலவுக்கும் நடுவில், பூமி வரும். இந்த ஐந்து நாட்களில், சூரிய துகள், நிலவு மேல் படாமல் தடுக்கப்படுவதால், வளி மண்டலத்தில் இருந்து வரும் துகள், நிலவின் இரும்பு தாதுக்கள் மேல் படுகிறது. இது புவிக்காற்று என்று சொல்லப்படுகிறது. இந்த நிகழ்வால், அங்கு ஆக்சிஜனேற்றம் நடந்து நிலவின் துருவப் பகுதி துருப் பிடிக்க தொடங்கியுள்ளது."சீன விஞ்ஞானி சொன்ன இந்த விளக்கத்தை சோதித்து பார்க்க நினைத்த விண்வெளி ஆய்வாளர்கள், விண்வெளி போல், செயற்கையாக செட்டப் ஒன்றை தயார் செய்து அதில், நிலவின் இரும்பு தாதுக்கள் இருக்கும் படிமங்கள் மீது ஆக்சிஜனை செலுத்தினர். இந்த சோதனையில், சில படிமங்கள் துருப் பிடிக்க தொடங்கியது. இந்த சோதனை மூலம் நிலவில் எப்படி துருப்பிடித்தது என்று, விஞ்ஞானிகள் ஒரு முடிவுக்கு வந்துள்ளனர்.நிலவு துருப்பிடித்தால், அதன் பிரகாசம் மங்கி விடுமா? என்ற கேள்வியும் எழுந்து உள்ளது. இதற்கு பதிலளித்த ஹவாய் யூனிவர்சிட்டி ஆய்வாளர்கள், "நிலவின் மேற்பரப்பில் இருக்கும் இரும்பு தாதுக்களால் துருப்பிடித்தல் நிகழ்வு நடந்து வருகிறது. இதனால், நிலவின் ஒளி மங்கி விடும் என்ற பேச்சுக்கே இடமில்லை. நிலவு தனது அதே பிரகாசத்துடன் இருக்கும்" என்று கூறி உள்ளனர்.