Also Watch
Read this
Posted on: Mar 24, 2026 08:13 AM
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருமாவளவன் இடையே ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.
ஆறு தனித் தொகுதிகள் மற்றும் இரண்டு பொதுத் தொகுதிகள் விசிகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. கடந்த தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்டு நான்கில் வென்ற நிலையில், இந்த முறை 8 தொகுதிகளில் விசிக போட்டியிடுகிறது.
திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்
ஒப்பந்தம் கையெழுத்து ஆன பிறகு, அண்ணா அறிவாலயத்தில் திருமாவளவன் கூறியதாவது;
வரும் சட்டப்பேரவைத் தொகுதியில், 200க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன், தேர்தல் பணியை முன்னெடுப்போம். கூட்டணியின் வெற்றியை முன்னிறுத்தி அனைத்து கோணங்களிலும் நல்லது, கெட்டதை சீர்தூக்கி பார்த்தோம். விசிக நலனும், கூட்டணியின் நலனும் முக்கியம். இதனைக் கருத்தில் கொண்டே உடன்பாடு.
தொகுதி உடன்பாட்டில் மன நிறைவு
இடதுசாரி அரசியலை பாதுகாக்க போராடக்கூடிய இயக்கங்களுக்கு திமுக 18 தொகுதிகளை வழங்கி உள்ளது. வி.சி.க. - 8, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 10 என மொத்தம் 18 தொகுதிகள் ஒதுக்கியதை அவ்வாறே பார்க்கிறேன்.
மேலோட்டமாக பார்த்தால் எண்ணிக்கை குறைவாக தோன்றும், ஆனால் வெற்றி இலக்கை நோக்கியே உடன்பாடு, திமுக உடனான தொகுதி உடன்பாட்டில் மனநிறைவு. திமுக கூட்டணியில் தொடர்ந்து பயணிப்பதற்கு, ஜனநாயக அரசியல் பாதுகாப்பு தான் காரணம்.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved