Also Watch
Read this
Posted on: Mar 24, 2026 09:59 AM
சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, நெல்லையில் அல்வா தயாரிப்பு பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
அல்வா தயாரிப்பில் சிக்கல்
திருநெல்வேலி என்றாலே, நினைவுக்கு வரும் முக்கிய அடையாளங்களில் ஒன்று அல்வா. ஆனால், உலகளாவிய போர் பதற்றத்தின் எதிரொலியாக ஏற்பட்ட கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு, நெல்லையின் அல்வா உற்பத்தியை நேரடியாக பாதித்து உள்ளது. கடந்த பத்து நாட்களாக சிலிண்டர் விநியோகத்தில் குறைபாடு நிலவி வருகிறது. நெல்லை மாவட்டத்திற்கு குறைந்த அளவில் மட்டுமே கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்பட்டதால், இனிப்பு தயாரிப்பு நிறுவனங்கள் சிக்கலில் சிக்கி உள்ளன.
அல்வா பிரியர்களுக்கு அதிர்ச்சி
நெல்லையின் பிரபல இனிப்பு நிறுவனமான சாந்தி ஸ்வீட்ஸ் கடையில், கடந்த சில நாட்களாகவே இனிப்பு மற்றும் கார வகைகளின் உற்பத்தி குறைக்கப்பட்டு இருந்தது. தற்போது சிலிண்டர் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளதால், கையிருப்பில் உள்ள எரிவாயு தீரும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால், அல்வா உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்த நிறுவன நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. தற்போதைய கையிருப்பில் உள்ள அல்வா இன்று ஒரு நாள் மட்டுமே விற்பனைக்கு போதுமானதாக உள்ளது. இதனால், நாளை முதல் அல்வா கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த திடீர் அறிவிப்பு அல்வா பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிலிண்டர் வருமா?
இதுகுறித்து கடை உரிமையாளர் சிவசுப்பிரமணியன் கூறியதாவது;
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, அல்வா தயாரிப்பில் கடுமையான சிக்கல் ஏற்பட்டு உள்ளது. பிரச்சனையை சமாளிக்க மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும், தற்போதைய நிலவரத்தில் அல்வா உற்பத்தி, இன்று வரை மட்டுமே சாத்தியம். நாளை முதல் விற்பனை தொடருமா? என்பது உறுதியாக கூற முடியாத நிலை உள்ளது. சிலிண்டர் பிரச்சனை விரைவில் தீரும் என எதிர்பார்த்திருந்தோம். ஆனால், நீடித்து வருவதால் மாற்று வழிகளை தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது
இவ்வாறு சிவ சுப்பிரமணியன் கூறினார்.
அல்வா உற்பத்தியில் பாதிப்பு
இந்த பிரபல ஸ்வீட் நிறுவனத்தில், நாளொன்றுக்கு ஐந்தாயிரம் கிலோ வரை அல்வா விற்பனை ஆகும். சபரிமலை சீசன் காலங்களில் பத்தாயிரம் கிலோ வரை உற்பத்தி செய்து, விற்பனை செய்யப்படும்.
இந்த கடையில் தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இது போன்று அடுத்தடுத்து அதிக அளவில் அல்வா உற்பத்தி செய்து விற்பனை செய்யும் கடைகளிலும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதே நிலை நீடித்தால், அடுத்த சில தினங்களில் நெல்லையின் புகழ்பெற்ற அல்வா, திருநெல்வேலிக்காரர்களுக்கே கிடைக்காத நிலை ஏற்பட்டு விடும் என்ற நிலையே உள்ளது.
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் 50 சதவீதம் உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும், சந்தையில் சிலிண்டர் கிடைக்கவில்லை என்ற நிலையே காணப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved