புரட்டாசி மாத 3வது சனிக்கிழமையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் கோவிந்தா கோஷத்துடன் பெருமாளை பக்தி பரவசத்துடன் தரிசித்து சென்றனர்.பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படும் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி புரட்டாசி 3 வது சனிக்கிழமையையொட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில் ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.புரட்டாசி 3 வது சனிக்கிழமையையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தந்திருந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அதிகாலை முதலே குடும்பத்துடன் வந்திருந்த பக்தர்கள் வரிசையில் கால் கடுக்க காத்திருக்க, சிறுவர்கள், முதியவர்கள் நெடுநேரம் நிற்கமுடியாமல் சிரமத்திற்கு ஆளாகினர். பின்னர் கோவில் நடை திறந்தபோது பக்தர்கள் முண்டியடித்து உள்ளே சென்றதால் சிறு பரபரப்பு நிலவியது. நடு நாட்டு திருப்பதி என போற்றப்படும் கடலூர் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் புரட்டாசி 3 வது சனிக்கிழமையையொட்டி பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. திருப்பதி சென்று நேர்த்திக்கடன் செலுத்த முடியாத பக்தர்கள் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் மொட்டை அடித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.