Also Watch
Read this
வருகிற சட்டமன்ற தேர்தலில், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்த திருமாவளவன், திடீரென முடிவில் இருந்து பின் வாங்கியிருப்பது விசிகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. துணை முதலமைச்சர் பதவியை குறி வைத்து சட்டமன்ற தேர்தலில் களமிறங்குவதாக சிலர் அவதூறு பேசியதால் முடிவை மாற்றியதாக திருமாவளவன் விளக்கம் கொடுத்திருக்க, திருமாவின் திடீர் முடிவுக்கான பின்னணி என்ன? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

காட்டுமன்னார்கோவில் தொகுதியில்...
காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்த ஐந்தே நாளில் பின் வாங்கும் திருமாவின் முடிவுக்கு என்ன காரணம் இருக்கும்? என்பது தான் சிறுத்தைகளின் ஆழ்ந்த யோசனையாக உள்ளது. திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், கடந்த 29ஆம் தேதி வேட்பாளர்களை அறிவித்தார் திருமாவளவன். ஒவ்வொரு தொகுதிக்கும் வேட்பாளர்களை அறிவித்த திருமாவளவன், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் தாமே களமிறங்குவதாக அறிவித்தார். சிதம்பரம் தொகுதியில் எம்.பி.யாக இருக்கும் திருமாவளவன், டெல்லி அரசியலில் இருந்து மாநில அரசியலுக்குள் எண்ட்ரீ கொடுப்பது சிறுத்தைகள் மத்தியில் உற்சாகத்தை கொடுத்தது. இன்னொரு பக்கம், திடீரென திருமாவளவன் மாநில அரசியலில் எண்ட்ரீ கொடுப்பது ஏன்? என்ற விவாதமும் சூடுபிடித்த நிலையில், அந்த முடிவில் இருந்து திடீர் டுவிஸ்ட்டாக திருமாவளவன் பின் வாங்கியிருக்கிறார்.

பின் வாங்கியது ஏன்?
தேர்தலில் போட்டியிடும் முடிவில் இருந்து பின் வாங்கியது ஏன்? என விளக்கம் அளித்த திருமாவளவன், தேர்தலில் போட்டி என்ற தனது நோக்கத்தை கொச்சைப்படுத்தும் வகையில் துணை முதலமைச்சர் பதவிக்கு தாம் ஆசைப்படுவது போல திமுக தலைமையிலான கூட்டணியின் நலனை சிதைக்கும் வகையில் சிலர் அவதூறு பரப்பி வருவதால் தான், முடிவில் இருந்து பின் வாங்கியதாக கூறினார்.

முடிவில் மாற்றம் ஏன்?
திருமாவளவன் மாநில அரசியலுக்குள் நுழைவது குறித்து அவர் கூறியவாறு யூக கருத்துக்கள் எழுந்தது உண்மை தான் என்றாலும், அதற்காக தனது முடிவை திருமாவளவன் மாற்றிக் கொண்டிருக்கிறார் என்பது விசிகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. கிட்டத்தட்ட 20 ஆண்களுக்கு பிறகு திருமாவளவன் குரல் சட்டசபையில் ஒலிக்க போகிறது என்ற கனவுடன் காத்திருந்த விசிகவினருக்கு திருமாவின் திடீர் மனமாற்றமும், அதற்காக திருமாவளவன் கொடுத்திருக்கும் விளக்கமும் ஏற்றுக் கொள்ளும் படியாக இல்லை என்றே கூறப்படுகிறது. துணை முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு திருமாவளவன் மாநில அரசியலுக்கு வருகிறார் என்று சமூக வலைதளங்களில் பேசியதற்காக, தனது முடிவையே மாற்றி கொள்ளும் தூரத்திற்கு திருமாவளவன் சென்றிருப்பது ஆச்சரியத்திற்குள்ளாக்கி உள்ளது. ஏனென்றால், பதவிக்கு ஆசைப்படாத அரசியல் தலைவர்கள் யாரும் இல்லை. திருமாவளவனை பொருத்தவரையில் துணை முதலமைச்சர் பதவி அதிகாரத்தை நோக்கிய ஆரம்பப்புள்ளியாக இருக்கும் என்பதால் அதை யாரும் தவறாக நினைப்பதற்கும் வாய்ப்பு இல்லை. அப்படி இருக்கையில், திருமாவளவன் துணை முதலமைச்சர் பதவிக்கு ஆசைப் படுகிறார் என பேசப்படுவது என்னமோ விரும்பத்தகாத சொல் போல தனது முடிவை மாற்றிக் கொண்டிருக்கிறார் திருமாவளவன்.

பதவி ஆசை இல்லை
மொத்தத்தில், செய்தியாளர் சந்திப்பு, போட்டியில் இருந்து விலகியது ஏன் என்ற விளக்கத்தை விட, தனக்கு பதவி மீது ஆசையில்லை என திருமாவளவன் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதையே உணர்த்தியது. ஏனென்றால், 2001ஆம் ஆண்டு எம்.எல்.ஏ. பதவியில் இருந்து ராஜினாமா செய்தது தொடங்கி, 2006ஆம் ஆண்டு தற்போதைய காங்கிரஸ் தலைவரான செல்வபெருந்தகைக்காக திட்டக்குடி தொகுதியை விட்டுக் கொடுத்து போட்டியிடாமல் இருந்தது என பழைய கால வரலாறு தொடங்கி ஆட்சி, அதிகாரத்தில் பங்கு இந்த தேர்தலில் கேட்க மாட்டோம் என திட்டவட்டமாக மறுத்தது வரை, மீண்டும் மீண்டும் தனக்கு பதவி ஆசை இல்லை என்பதை நிரூபிக்க வேண்டிய, வெளிக்காட்ட வேண்டிய அவசியம் திருமாவளவனுக்கு வந்தது ஏன்? என்பதும் கேள்வியாக உள்ளது.

முடிவுக்கு பின்னணி என்ன?
இந்த நிலையில், திருமாவளவன் முடிவுக்கு பின்னணி என்ன? என்று விசாரித்த போது திமுகவின் பங்கும் இருப்பதாக சொல்லப்படுகிறது. திருமாவளவன் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட்டால், அவர் எம்.பி., யாக இருக்கும் சிதம்பரம் மக்களவை தொகுதி காலியாக மாறும். இடைத்தேர்தல் நடத்தும் சூழல் வரும். இடைத் தேர்தலை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு திமுகவுக்கு தான் வரும். ஆகையால், எஞ்சியிருக்கும் மூன்று ஆண்டுகள் எம்.பி., பதவி முடித்து விட்டு, 2031ஆம் ஆண்டு வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடலாம் என திருமாவளவனுக்கு திமுக யோசனை கொடுத்ததாக கூறப்படுகிறது. சட்ட மன்ற தேர்தலை விட எம்.பி., தேர்தலுக்கு பெரும் செலவு ஆகும் என்ற நிலையில், தற்போதைய சூழலில் இடைத் தேர்தலை சந்திக்க வேண்டாம் என திமுக கேட்டுக் கொண்டதால், திருமாவளவன் தனது முடிவை மாற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது.

காட்டுமன்னார் கோவில் வேட்பாளர்
இது ஒரு பக்கம் இருக்க, திருமாவளவன் மாநில அரசியலுக்குள் நுழைந்தால் பட்டியலின முகமாக இருக்கும் திருமாவளவனின் மைலேஜ் இன்னும் பல மடங்கு உயரும். ஒட்டு மொத்த பட்டியலின மக்களின் முகமாக திருமாவளவன் மாறுவார். மாநில அரசியலில் திருமாவின் குரல் வலுவாக பார்க்கப்படும். அப்படி இருக்கையில், திடீரென தேர்தலில் போட்டியில்லை என்ற முடிவை எடுத்தது விசிகவினருக்கு சங்கடத்தை கொடுத்துள்ளது. இருப்பினும் கூட திருமாவளவனுக்கு பதிலாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர் ஜோதிமணி, வலுவான வேட்பாளர் என்பதும் கவனிக்க கூடிய விஷயம். வட தமிழ்நாட்டில் வன்னியர்கள் - பட்டியலின மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி போராடிய சமூக போராளி இளைய பெருமாளின் குடும்ப வாரிசை தேர்தலில் நிற்க வைத்திருக்கும் திருமாவளவன் ஐடியாவும் நல்ல யுக்தியாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஜோதிமணி காங்கிரஸை சேர்ந்தவர் என்ற நிலையில், விசிகவினர் எத்தனையோ பேர் இருக்கும் போது, காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருக்கு வாய்ப்பு கொடுப்பதா? என்ற அதிருப்தி குரலும் விசிகவில் எழுந்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, கடந்த முறை தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆன எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ், பனையூர் பாபு ஆகிய 3 பேருக்கும் சீட்டு வழங்காததும் விவாதத்திற்குள்ளான நிலையில், அதற்கும் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved