நீண்ட நாட்களுக்கு பிறகு, ஜாய் கிரிசில்டா விவகாரத்தில், மௌனம் கலைத்துள்ளார் மாதம்பட்டி ரங்கராஜ்.சமையல் கலை நிபுணரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி, ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா எழுப்பியுள்ள புகார் கடந்த சில மாதங்களாகவே பேசு பொருளாக உள்ளது. தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே, இரண்டாவதாக ஜாய் கிரிசில்டாவை திருமணம் செய்து கொண்டதாக அவர் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது மட்டுமில்லை, தற்போது ஜாய் கிரிசில்டா 7 மாத கர்ப்பிணியாக இருப்பதும், அதற்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் காரணம் என வரும் செய்தியும் மேலும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. இப்படி இருக்கையில், மாதம்பட்டி ரங்கராஜ் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்த ஜாய் கிரிசில்டா, தொடர்ந்து பல ஊடகங்களுக்கும் பேட்டி கொடுத்து வருகிறார். அவ்வப்போது மாதம்பட்டி ரங்கராஜ் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து நெட்டிசன்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அண்மையில் தனது இன்ஸ்டா போஸ்ட் ஒன்றில் முதலமைச்சர் ஸ்டாலினை டேக் செய்து ”அப்பா எனக்கு நியாயம் வாங்கி கொடுங்கள்” என்றும் பதிவிடடார். இவரது இந்த செயல்கள், இந்த விவகாரத்தின் மீது பெரும் கவனத்தை ஈர்த்தது.இதையடுத்து விவகாரத்தின் ஆழத்தை புரிந்து கொண்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு இருவரிடமும் விசாரணை நடத்தி வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறு புறம் மாதம்பட்டி ரங்கராஜ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணையும் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து இத்தனை நாட்களாக மௌனம் சாதித்து வந்த மாதம்பட்டி ரங்கராஜ், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.அவர் வெளியிட்டுள்ள பதிவு:நீதிமன்றத்திற்கு வெளியே, ஜாய் கிரிசில்டா எழுப்பிய தற்போதைய சர்ச்சையைத் தீர்த்து வைக்குமாறு பல நபர்கள் என்னை அணுகி வருகின்றனர். சட்டத்தின்படி உண்மை நிலை நாட்டப்படும். நடந்து வரும் சர்ச்சை குறித்து எந்த கருத்துகளையும், அனுமானங்களையும் வெளியிடுவதை தவிர்க்குமாறு அனைத்து ஊடக நிறுவனங்களையும் நான் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். ஜாய் கிரிசில்டா எதிர்பார்ப்பது போல் நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண ஒப்புக்கொள்ள மாட்டேன். எனது நலனில் அக்கறை காட்டி, எனக்கு உறுதுணையாக இருந்து, ஆதரவு மற்றும் பிரார்த்தனை வழங்கிய அனைத்து நலன் விரும்பிகளுக்கும், எனது இதயப்பூர்வமான நன்றி.இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். இது, இணையவாசிகளிடையே பேசுபொருளாகியுள்ளது. இந்த விவகாரம் தொடங்கியது முதலே மாதம்பட்டி ரங்கராஜின் ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள் அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் தங்களது கருத்துகளை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். மேலும், இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.