Also Watch
Read this
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத் தர அனைத்து முயற்சிகளையும் அதிமுக மேற்கொள்ளும் என எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்தார். புதுச்சேரியில் கம்யூனிஸ்ட் கட்சிகளை கூட்டணியில் சேர்க்காதது ஏன்? என திமுகவுக்கு கேள்வி எழுப்பிய அவர், தமிழ்நாட்டில் ஒரு நிலைப்பாடு புதுவையில் ஒரு நிலைப்பாடு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுவதாகவும் குற்றம்சாட்டினார்.

புதுச்சேரியில் எடப்பாடி பழனிசாமி
புதுச்சேரி மாநில சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் உப்பளம் தொகுதியில் போட்டியிடும் மாநில செயலாளர் அன்பழகன், உருளையன்பேட்டை தொகுதியில் போட்டியிடும் காந்தி ஆகியோரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்து பேசியதாவது;
மாநிலத்தில் ஒரு கட்சியும், மத்தியில் ஒரு கட்சியும் ஆட்சி செய்தால், மாநிலத்துக்கு தேவையான திட்டங்களும் கிடைக்காது, நிதியும் கிடைக்காது. ஒரு வண்டிக்கு இரண்டு சக்கரம் இருந்தால் தான் இலக்கை அடைய முடியும். அந்த அடிப்படையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைந்திருக்கிறது.

தலை குனிய வைத்த கட்சி
திமுக தலைவர் ஸ்டாலின் இங்கு தேர்தல் பிரச்சாரத்துக்கு வருவார். தமிழகத்தில் கொள்ளையடித்தது போதாது என்று இங்கும் கொள்ளையடிக்கப் பார்க்கிறார். தமிழகத்தில் கலெக் ஷன், கமிஷன், கரப்ஷன் நடக்கிறது. டாஸ்மாக்கில் மட்டும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கு ஊழல் செய்துள்ளனர்.

புதுச்சேரியில் மதுபான விற்பனை அதிகமாக இருக்கிறது. அது ஸ்டாலினுக்கு கண்ணை உறுத்திக்கொண்டு இருக்கிறது. கண்ணுக்கு தெரியாத காற்றிலும் ஊழல் செய்கின்ற ஒரே கட்சி திமுக. மத்தியில் ஒரு லட்சத்து 74,000 கோடி ரூபாய் கொள்ளையடித்த 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் நாட்டையே உலுக்கி விட்டது. உலகளவில் கூட இந்த அளவுக்கு ஊழல் நடக்கவில்லை. நாடு முழுவதும் நம்மை தலைகுனிய வைத்த கட்சி திமுக.
இவ்வாறு பேசி, இபிஎஸ் வாக்கு சேகரித்தார்.

தேமுதிகவுக்கு பதில்
ராஜ்யசபா எம்.பி. பதவியை தேமுதிகவுக்கு ஒப்பந்தப்படி அதிமுக கொடுக்கவில்லை என்று பிரேமலதா கூறியதற்கு பழனிசாமி பதில் அளித்துள்ளார். நெய்வேலி பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது;
விஜய்காந்த், திமுகவை கடுமையாக எதிர்த்தார். திமுகவை கடுமையாக எதிர்த்த கட்சி தேமுதிக. கருணாநிதியை மேடையில் வைத்துக் கொண்டே அவர் முன்னிலையில் விஜய்காந்த்தை நடிகர் வடிவேலு கடுமையாக விமர்சித்தார்.
அப்படிப்பட்ட திமுக உடன் ஏதோ காரணங்களுக்காக தேமுதிக கூட்டணி அமைத்திருக்கிறீர்கள். அது உங்கள் சொந்த விஷயம். அதற்குள் நான் செல்லவில்லை. ஆனால், இன்று நம்மைப் பார்த்து ராஜ்யசபா எம்பி பதவியை தேமுதிகவுக்கு தரவில்லை என்று சொல்கிறார்கள். 2026ல் அதிமுக உடன் கூட்டணி அமைத்து தேமுதிக போட்டியிட்டால், ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்கப்படும் என்று நான் தெளிவாக கூறினேன்.
இவ்வாறு இபிஎஸ் பேசினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved