Also Watch
Read this
வரும் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், துணை முதலமைச்சர் உதயநிதி, தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளிலும் விஜய் போட்டியிடுவது உறுதியானதால் தவெகவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

தமிழக சட்டசபை தேர்தல் களம்
2026 சட்டமன்ற தேர்தலுக்கான 2026 Tamil Nadu Legislative Assembly election வாக்குப்பதிவு வரும் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில் கடந்த மார்ச் 30ஆம் தொடங்கிய வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 6ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் காலை முதலே வேட்புமனு பரிசீலனை தொடங்கி நடைபெற்றது. சென்னை கொளத்தூர் தொகுதியில் 5ஆவது முறையாக போட்டியிடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் மீண்டும் களம் காணும் துணை முதலமைச்சர் உதயநிதியின் வேட்புமனு ஏற்கப்பட்டது.

விஜய்க்கு கடும் எதிர்ப்பு
பெரம்பூரில், த.வெ.க. தலைவர் விஜய்யின் வேட்புமனுவும் ஏற்கப்பட்டது. அப்போது, பாமக வேட்பாளர் திலகபாமா மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் சிலர் விஜய்யின் வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மாறி மாறி அளிக்கப்பட்டுள்ளன எனவும் விஜய் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் கேரவனின் மதிப்பு 6 கோடி ரூயாகும், அதனை சொத்துப்பட்டியலில் சேர்க்கவில்லை எனவும் புகார் தெரிவித்தனர்.

அதனால் தேர்தல் அதிகாரிகளுக்கும், அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கும் இடையில் சிறிது நேரம் விவாதம் நடைபெற்றது. அதன்பிறகு, போதிய ஆவணங்கள் இருப்பதாக கூறி, தேர்தல் அதிகாரிகள் விஜய் வேட்புமனுவை ஏற்றுக் கொண்டனர்.

திருச்சி கிழக்கு தொகுதி
இதுஒருபுறமிருக்க, திருச்சி கிழக்கு தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவில் தன் மீது 2 குற்ற வழக்குகள் இருப்பதாக குறிப்பிட்டிருந்த விஜய், பெரம்பூர் தொகுதியில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவில் அதனை குறிப்பிடவில்லை. மாறாக தன் மீது குற்ற வழக்குகள் எதுவும் இல்லை என பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமல்லாது பெரம்பூர் வேட்புமனு தாக்கலின்போது தனது வயதை 52 என குறிப்பிட்டிருந்த விஜய், திருச்சி கிழக்கில் 51 என குறிப்பிட்டிருந்தார். இப்படி 2 மனுக்களிலும் குழப்பம் எழ கடந்த 4ஆம் தேதியே புதிதாக திருத்தப்பட்ட பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்து, அந்த கேள்விக்கும் முற்றுப்புள்ளி வைத்தார் விஜய். அதனால், திருச்சி கிழக்கிலும் விஜயின் வேட்புமனு ஏற்கப்பட்டது. இதனால் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் விஜய் போட்டியிடுவது உறுதியானதால் தவெக தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

வேட்பு மனுக்கள் ஏற்பு
சேலம் எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ள நிலையில் சாத்தூரில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மயிலாப்பூர் தொகுதியில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜனின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன. மேலும், காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தருமபுரியில் செளமியா அன்புமணி மற்றும் கோவை வடக்கில் வானதி சீனிவாசனின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன.

இதனிடையே, வில்லிவாக்கம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் ஆதவ் அர்ஜூனாவின் வேட்புமனு பரிசீலனை சுயேட்சை வேட்பாளரின் ஆட்சேபத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அவரது மனைவியின் பெயரில் உள்ள நிறுவனங்களின் பெயரை மறைத்தது தொடர்பாக பிரச்சனை எழுந்ததால் குழப்பம் ஏற்பட்டு பின்னர் அனைத்து விவரங்களும் சரியாக இருப்பதாக கூறி வேட்புமனு ஏற்கப்பட்டது.

விருத்தாசலம், விருதுநகர்...
விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா தாக்கல் செய்த வேட்பு மனுவை தேர்தல் அலுவலர்கள் ஏற்றுள்ள நிலையில், விருதுநகரில் போட்டியிடும் அவரது மகன் விஜய பிரபாகரனின் வேட்பு மனுவும் ஏற்கப்பட்டுள்ளது. தியாகராயநகரில் போட்டியிடும் த.வெ.க.பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, போடி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம், திருவிக நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன.

ஆட்சேபம், அடிதடி, கைது
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணியின் ஆதரவாளர்கள் இருவரை சரமாரியாக அடித்து உதைத்து வேட்புமனு பரிசீலனையை பதைபதைப்பை ஏற்படுத்தும் ஒரு இடமாக மாற்றி உள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது பொய்யான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதாக காட்பாடி பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதனை எதிர்த்து கே.சி.வீரமணி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடும் செய்யப்பட்டது.

இந்நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் ஜோலார்பேட்டையில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் கே.சி.வீரமணி. அவர் தாக்கல் செய்திருந்த பிரமாண பத்திரம் பொய்யானது என வேட்புமனு பரிசீலனையின்போது மீண்டும் ஆட்சேபனை தெரிவிக்க ராமமூர்த்தியும் அவருடைய நண்பர் ஜெயபிரகாசும் நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். இதனை அறிந்த அதிமுகவினர் இருவரையும் சரமாரியாக அடித்து உதைத்து பதற வைத்தனர். இதுகுறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஒருபுறம் விசாரணை நடந்து வரும் நிலையில் தாக்குதலில் தொடர்புடைய 5 பேரை போலீசார் கைதும் செய்தனர். இதனிடையே, கே.சி.வீரமணியின் வேட்புமனுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

நாளை இறுதி நாள்
முக்கிய தலைவர்கள் உள்ளிட்டோரின் வேட்புமனுக்கள் வாக்குவாதம், சண்டை, சச்சரவு, கூச்சல், குழப்பம், அடிதடி என த்ரில்லிங்குடன் நடந்திருந்தாலும் வரும் 9ஆம் தேதி வேட்புமனுக்கள் திரும்ப பெற இறுதி நாளாகும். அன்று மாலைதான் அதிகாரப்பூர்வமான இறுதி வேட்பாளர் பட்டியல் நிலவரம் தெரியவரும்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved