திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பங்குனி பெருவிழா தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர். கடந்த 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவினை முன்னிட்டு முருகப்பெருமான் தெய்வானையுடன் தங்க மயில் வாகனம், தங்க குதிரை வாகனம், உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தனர். இதன் தொடர்ச்சியாக விழாவின் சிகர நிகழ்ச்சியாக பெரிய தேரோட்டம் நடைபெற்றது.இதனை முன்னிட்டு உற்சவர் சன்னதியில் முருகன் தெய்வானைக்கு பால்,பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். இதனை கண்டபக்தர்கள் அரோகரா முழக்கம் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.