நமது மொபைலில், வாட்சப்-க்கு வரும் ஒரே ஒரு மெசேஜ், ஒட்டு மொத்த வங்கி கணக்கையும் காலி செய்து விடும் என, சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கின்றனர். அந்த மெசேஜ் என்ன? மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி?டெக்னாலஜி வளர்ச்சியால், செல்போன் இல்லாத நபரே இல்லை என்ற அளவுக்கு வாழ்க்கை முறை மாறிவிட்டது. காலையில் கண் விழிப்பதில் இருந்து இரவு படுக்கைக்கு செல்லும் வரை செல்போன் வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. ஆனால், இந்த செல்போனை சரியாக பயன்படுத்தாவிட்டால் அதன் ஆபத்துகளும் அதிகம் என மருத்துவர்களும், போலீசாரும் எச்சரிப்பது வாடிக்கையாகி விட்டது. செல்போனில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் வாட்சப்-க்கு வரும் ஒரு மெசேஜ் உங்களிடம் இருக்கும் பணத்தை பறித்துவிடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வழிப்பறி, கொள்ளை என காலம் மாறி, தற்போது இணைய வழி மோசடிகளே தலை தூக்கியுள்ளதால் இதற்கு பெரும் பங்காற்றுவதாக செல்போன் உள்ளது. வாட்சப் மூலம் நடைபெறும் ஃபிஷிங் ஸ்கேம் என பெயரிடப்பட்டுள்ள மோசடியால் சிலர் பணத்தை இழந்துள்ளதாக புகார் அளித்துள்ளனர். அதாவது, அரசு முத்திரையை போல் வாட்சப்-க்கு வரும் மெசேஜை கிளிக் செய்தாலோ, அதை ஓபன் செய்தாலோ உடனே செல்போன் மற்றும் வங்கி கணக்கு ஹேக் செய்யப்பட்டு அதில் இருக்கும் பணம் முழுவதுமாக திருடப்படுகிறது. இப்படிப்பட்ட மோசடி, மீன் பிடிக்க தூண்டில் போடுவது போல் நடப்பதால், இதனை ஃபிஷிங் ஸ்கேம் என்று கூறுகின்றனர். அச்சு அசலாக அரசாங்க முத்திரை, வங்கிகளின் லோகோ, எரிவாயு நிறுவனங்கள், அமேசான் போன்ற பெரிய வர்த்தக நிறுவனங்களின் பெயர், புகைப்படங்கள், லோகோக்களை பயன்படுத்தி மெசேஜ் அனுப்பி இதுபோன்ற மோசடிகள் அரங்கேறி வருகின்றன. அடுத்ததாக, உடனே கரண்ட் பில் செலுத்த வேண்டும், இல்லையென்றால் மின் இணைப்பை துண்டித்து விடுவோம் என வரும் பிளாக் மெயில், லாட்டரி அல்லது பரிசு விழுந்து இருப்பதாக ஆசை வார்த்தை கூறி, மோசடி அரங்கேறி வருவதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கின்றனர். மேலும், வெளிநாட்டு எண்களில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்றாலும் செல்போன் ஹேக் செய்யப்படும் என்றும் கூறுகின்றனர். இதுபோன்ற சைபர் கிரைம் மோசடிகளை குறைக்க அரசு என்ன தான் நடவடிக்கை எடுத்தாலும், புதுப் புது ரூட்டை கையிலெடுத்து மோசடியை அரங்கேற்றி வருகின்றனர். இந்த ஆண்டு மட்டும் சைபர் கிரைமுக்கு பயன்படுத்தப்பட்ட 7 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமான சிம் கார்டுகளை காவல்துறை தரப்பில் பிளாக் செய்துள்ளதாகவும், 83,000 வாட்ஸ்அப் கணக்குகளையும், 3,000 ஸ்கைப் ஐடிக்களை முடக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. சைபர் கிரைம் மோசடிகளை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும், ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் எச்சரிக்கையாக இருந்தால் மட்டுமே பண இழப்பை தடுக்க முடியும் என, சைபர் கிரைம் போலீசார் கூறுகின்றனர். அதாவது தெரியாத நம்பரில் இருந்து வரும் லிங்க், சந்தேகப்படும்படியான மெசேஜ் ஆகியவற்றை தொடவே கூடாது. வங்கி, மின் வாரியம், கேஸ் நிறுவனம், அரசு அலுவலகங்களில் இருந்தோ பேசுகிறோம் என வரும் ஃபோன் அழைப்புகளை தவிர்க்க வேண்டும். இந்த பெயர்களில் வரும் மெசேஜை இரண்டு, மூன்று முறை பரிசோதித்து விட்டு அதன் அதிகாரப்பூர்வ வெப்சைட் அல்லது எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும். வங்கியில் இருந்து பேசுகிறோம், ஓடிபி சொல்லுங்க என்று யார் கேட்டாலும் அதை பகிர கூடாது என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கின்றனர்.