பழைய எதிரிகள், புதிய எதிரிகள் என, எந்தக் கொம்பனாலும் திமுக எனும் கொள்கை உறுதிமிக்க எஃகு கோட்டையை தொட்டுக் கூட பார்க்க முடியாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். கரூர் மாவட்டத்தில், வரும் 17ஆம் தேதி நடைபெறவுள்ள திமுக முப்பெரும் விழாவை ஒட்டி, தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:முப்பெரும் விழா என்பது நம்மை நாமே ஊக்கப்படுத்திக் கொள்ளும் திருவிழா. பழைய எதிரிகள், புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் திமுக எனும் கொள்கை உறுதிமிக்க எஃகுக் கோட்டையைத் தொட்டுக் கூட பார்க்க முடியாது என்று உங்களில் ஒருவனான நானும், என்னுள் கலந்திருக்கும் உடன்பிறப்புகளான நீங்களும் சூளுரைக்கும் திருநாள்.திமுக தலைமைப் பொறுப்பை உங்களில் ஒருவனான நான் ஏற்றுக் கொண்டது முதல், சென்னைக்கு வெளியே ஏதேனும் ஒரு மாவட்டத்தில் முப்பெரும் விழாவைக் கொண்டாடி வருகிறோம். அந்த வகையில், இந்த ஆண்டு 2025 செப்டம்பர் 17ஆம் தேதி, கரூர் மாநகரின் புறவழிச்சாலையில் கோடாங்கிப்பட்டி எனும் இடத்தில் முப்பெரும் விழா எனும் கொள்கைத் திருவிழா நடைபெற உள்ளது. எதைச் செய்தாலும் அனைவரும் அதிசயிக்கும் வகையில் பிரம்மாண்டமாகவும், ‘இப்படியும் செய்ய முடியுமா?’ என்ற நேர்த்தியுடனும், ’இவரால் தான் இது முடியும்’ என்று அனைவரின் பாராட்டையும் பெறும் வகையிலும் செயல்படக்கூடிய கரூர் மாவட்ட செயலாளர் - மேற்கு மண்டலப் பொறுப்பாளர் செந்தில்பாலாஜி இரவும் பகலும் ஓய்வின்றி விழா ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்.நான் எப்போதும் விரும்புவது ஓய்வில்லா பணி தான். உடன்பிறப்புகளான உங்களிடம் எதிர்பார்ப்பதும் அத்தகைய பணிகளைத் தான். கரூரில் செப்டம்பர் 17ஆம் நாள் நடைபெறவிருக்கும் முப்பெரும் விழாவில் அலைகடலென ஆர்ப்பரித்து உடன்பிறப்புகளாகிய நீங்கள் கூடுவீர்கள் என்பதும், உங்கள் முகம் கண்டு நான் உற்சாகம் பெறுவேன் என்பதும் உறுதியானது.இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதையும் பாருங்கள்: "கொள்கை பட்டாளமாக கூடுவோம்" - முதலமைச்சர் மடல் | CM Stalin | DMK