Also Watch
Read this
Posted on: Mar 13, 2026 05:20 AM

கொரோனா கொடுங்காலத்தை வெற்றிகரமாக கடந்து வந்தது போல், தற்போதைய சூழலையும் கடந்து வருவோம் என்று, பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்து உள்ளார். கள்ளச்சந்தையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விற்கப்படுவதை மாநில அரசுகள், உன்னிப்பாக கவனித்து தடுக்கவும் வலியுறுத்தி உள்ளார்.
கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதுதொடர்பாக பிரதமர் மோடி கூறி இருப்பதாவது:
சீரற்ற சூழலை தவறாக பயன்படுத்தி லாபம் பார்க்க சிலர் முயல்கின்றனர். இதை தடுக்க கண்காணிப்பு வழிமுறைகளை வலுப்படுத்துமாறு மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறேன். இதுபோன்ற காலங்களில் கள்ளச் சந்தையை தடுக்க வேண்டும். எரிவாயு சிலிண்டர்களை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எரிவாயு சிலிண்டர் கண்காணிப்பை மேம்படுத்துமாறு மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறேன்.
மாற்று நடவடிக்கை
பல உலக நாடுகள் பாதிக்கப்பட்டு, எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இருப்பினும், இந்தியா தனது எரிசக்தியை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. விநியோக சங்கிலி தடைகளை சமாளிக்க மத்திய அரசு உலக தலைவர்களுடன் தொடர்பில் உள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்ந்து முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. விநியோக சங்கிலியில் உள்ள தடைகளை சரி செய்ய நாங்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளில் எத்தனால் கலப்பு மற்றும் பயோ-எரிபொருட்களை ஊக்குவிப்பதன் மூலம் பெட்ரோலிய சார்பு நிலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. இதுவே இந்தியாவின் நீண்டகால எரிசக்தி உத்தியாக இருக்கும்.
நெருக்கடியான சூழல்
உலகளாவிய நெருக்கடிக்கு தயார் நிலையை வலுப்படுத்த, இந்தியா பெட்ரோலிய இருப்பு மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்பை விரிவுபடுத்தி உள்ளது. இந்தியாவின் பெட்ரோல் இருப்பு, தற்போது 50 லட்சம் டன்களுக்கும் அதிகமாக உள்ளது. உலக சவால்கள் இருந்த போதிலும், இந்தியா தொடர்ந்து உறுதியுடனும் வேகத்துடனும் முன்னேறி, உலக வளர்ச்சியின் முக்கிய உந்து சக்தியாகத் திகழ்கிறது. உலகம் இப்போது ஒரு கடினமான காலகட்டத்தை சந்தித்து உள்ளது. இதனால் ஏற்படும் பாதிப்பை இந்தியா திறம்படக் கையாண்டு வருகிறது.
கொரோனா காலகட்டத்தில் செய்தது போலவே, இந்த நெருக்கடியையும் நாம் வெற்றிகரமாகக் கடந்து வருவோம், 140 கோடி இந்தியர்கள் மீதும் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. உலகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் போர்களின் காரணமாக, மக்கள் எவ்விதப் பிரச்சினைகளையும் எதிர்கொள்ளக் கூடாது என்பதே எங்களின் தெளிவான உறுதியாகும்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved