Also Watch
Read this
Posted on: Jan 06, 2026 07:35 AM
By: Web Team
சென்னை, அதன் புறநகர் பகுதிகளில் டீன் ஏஜ் எனப்படும் பதின்பருவ கர்ப்பம் தரித்தல் அதிகரித்து வருவதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. பதின் பருவ கர்ப்பம் தரித்தலால் ஏற்படும் அபாயங்கள், பாதிப்புகள் குறித்த ஒரு செய்தித் தொகுப்பை இப்போது பார்க்கலாம்.
அரசு மற்றும் சுகாதாரத்துறை நிபுணர்களின் விழிப்புணர்வு நடவடிக்கை மூலம் டீன் ஏஜ் கர்ப்பங்கள் எனப்படும், இளம்வயது கர்ப்பம் தரித்தல் என்பது குறைவாக இருப்பதாக கருதிக் கொண்டிக்கும் நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக அவை அதிகரித்து வருவது, ஆய்வின் மூலம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பூவிருந்தவல்லி சுகாதார மாவட்ட அளவில் கர்ப்பம் மற்றும் குழந்தை கூட்டு கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 281 இளம் கர்ப்பிணிகளிடம், அரசு பொது சுகாதாரத் துறை மருத்தவர்கள் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில், டீன் ஏஜ் கர்ப்பங்கள் சீராக அதிகரித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள், தமிழ்நாடு பொது சுகாதார மற்றும் மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், 18 முதல் 19 வயதுடைய இளம்பெண்கள் 73.3 சதவீதமும், 17 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் 20.3 சதவீதமும், 16க்கு உட்பட்டவர்கள் மிக குறைவாகவும், 15க்கு கீழ் யாரும் இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது. கடந்த 2022ஆம் ஆண்டில் 1.1 சதவீதமாக இருந்த டீனேஜ் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை 2023ல் 1.3 சதவீதமாகவும், 2025ல் அது கிட்டத்தட்ட 2 சதவீதமாகவும் அதிகரித்திருக்கிறது. மிகக் குறைந்த சதவீதம் போல இந்த எண்ணிக்கை தோற்றமளித்தாலும், டீன் ஏஜ் கர்ப்பங்கள், பல அபாயங்களை உள்ளடக்கியவை என எச்சரிக்கும் மருத்துவத்துறை வல்லுநர்கள், இளம் தாய்மார்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் பட்டியலிடுகின்றனர்.
சராசரியாக, நான்கில் ஒரு இளம் தாயின் பிரசவம் அதிக ரிஸ்க் உடையதாக வரையறுக்கப்பட்டுள்ளது. சுமார் 9 சதவீதத்திற்கும் அதிகமான டீன் ஏஜ் தாய்மார்கள் அனீமியா எனப்படும், ரத்த சோகையால் பாதிக்கப்படுவதாகவும், தைராய்டு சுரப்பி பற்றாக்குறையை குறிக்கும் ஹைபோதைராய்டிசம் மற்றும் கர்ப்பகால சர்க்கரை நோய்க்கும் ஆளாகின்றனர். இந்த பாதிப்புகள் குறைபிரசவம், குறைந்த எடையுடன் குழந்தை பிறப்பது மற்றும் குழந்தை மற்றும் தாய்க்கு நீண்ட கால பாதிப்புகளும் ஏற்படும் எனவும் கூறப்படுகிறது.
டீன் ஏஜ் கர்ப்பிணிகள் 66 சதவீதம் பேர் வரை சுகப்பிரசவம் மூலம் குழந்தைகளை பெற்றெடுக்க, சுமார் 32 சதவீதம் இளம்தாய்மார்கள் அறுவை சிகிச்சை மூலம் மகப்பேறை மேற்கொள்ள நேரிடுவதாக சொல்லப்படுகிறது. இதில் 2 சதவீதம் பேர் கருக்கலைப்பு செய்யும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இந்த தரவுகள், 2019 முதல் 2021 வரையில் நடத்தப்பட்ட ஐந்தாவது தேசிய குடும்ப நல ஆய்வின் விவரங்களோடு பொருந்துகின்றன. அந்த ஆய்வின்படி, தமிழகத்தில் 15 முதல் 19 வயதுக்குட்பட்ட இளம்பெண்கள் கர்ப்பம் தரிப்பதாக கூறப்பட்டுள்ளது. இளம் வயது திருமண தவிர்ப்பு, கல்விக்கான வாய்ப்பு பரவலாக்கம், டீன் ஏஜ் பெண்களுக்கு சாதகமான மருத்துவ உதவிகள் கிடைக்கச் செய்வதன் மூலம், டீன் ஏஜ் கர்ப்பங்களை தவிர்க்க முடியும் என்பது வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.
மேலும், இந்த ஆய்வை ஒரு எச்சரிக்கை மணியாக கருதி, பள்ளிகளிலேயே சுகாதாரக் கல்வி, குழந்தை திருமண தடுப்பு சட்டங்களை தீவிரமாக அமல்படுத்துதல் மட்டுமன்றி, டீன் ஏஜ் கர்ப்பிணிகளுக்கு உரிய நேரத்தில் உகந்த மருத்துவ உதவிகள் கிடைக்கச் செய்வது அவசியம் என்றும் மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved