Also Watch
Read this
திமுக பார்க்காத வெற்றியும் இல்லை, திமுக சந்திக்காத தோல்வியும் இல்லை என மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். தொண்டர்களாகிய நீங்கள் இருக்கும் வரை என்ன கவலை என்றும் பதிவிட்டுள்ளார்.

அனைவருக்கும் நன்றி
இதுதொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது;
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை உண்மை உணர்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவரின் ஒவ்வொரு வாக்கையும் விலை மதிப்பற்ற நம்பிக்கையாக கருதுகிறேன்.

வலிமையான நம்பிக்கை
திமுக கூட்டணிக்கு ஒரு கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்குகள் கிடைத்து உள்ளன. கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியானது, நம்மை விட 17.43 லட்சம் வாக்குகளை மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது. நமக்கும் அவர்களுக்குமான வாக்கு விழுக்காடு வேறுபாடு என்பது 3.52% மட்டுமே. என்னைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டு மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை வலிமையானதாகவே கருதுகிறேன். நமக்கு வாக்களித்த மக்களுக்கு நேரடியாகச் சென்று நன்றி தெரிவிக்கும் கடமையை நாம் எப்போதும் செய்து வருகிறோம். அந்த வகையில் திமுக சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும், உடனடியாக வாக்களித்த மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இயக்கத்தின் ரத்த நாளங்கள், வேர்கள்
ஆறு முறை ஆட்சியில் திமுக இருந்து உள்ளது. நாம் பார்க்காத வெற்றியும் இல்லை, நாம் சந்திக்காத தோல்வியும் இல்லை. அரசியல் பொதுவாழ்வில் கொள்கையைக் காக்கும் பயணத்தில் நமது கொள்கை, தோல்வி அடைந்துவிடக் கூடாது என்பதில் தான் நாம் எப்போதும் கவனமாக இருப்போம். வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் அதனைச் சமமாகக் கருதி லட்சியப் பயணத்தை நடத்துபவர்கள் தான் உடன்பிறப்புகள். முக்கியமான மாநாடுகள், பொதுக் கூட்டங்களில் பேசும்போதெல்லாம், தமிழ்நாடு முழுமைக்குமான தொண்டர்கள் அனைவருக்கும் வணக்கம் வைத்து விட்டுத்தான் நான் தொடங்குவேன். இயக்கத்தின் ரத்த நாளங்கள், வேர்கள் நீங்கள் தான்.

மக்களுக்கான அரசியல்
எனக்கு ஆறுதல் கூறி, பலரும் குறுஞ்செய்தி அனுப்பி வருகிறீர்கள். உங்களால் உருவாக்கப்பட்ட எனக்கு, உங்களது வலிமையால் வலிமை பெற்ற எனக்கு நீங்கள் உடனிருக்கும் வரை என்ன கவலை? நாம் அனைவரும் தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள். அந்த உணர்வோடு தொடர்ந்து நாம் பயணிப்போம். உங்கள் உழைப்பால் விளைந்த அறுவடைதான் 1.54 கோடி வாக்குகள். உங்கள் உழைப்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்? தலைமைத் தொண்டன் என்ற உணர்வோடு நாம் தொடர்ந்து பயணிப்போம். ஆளும் கட்சியாக இருந்தால் மக்களுக்கான திட்டங்களைத் தீட்டுவோம். எதிர்க்கட்சியாக இருந்தால் மக்களுக்கான கோரிக்கைகளுக்காகவே போராடுவோம். அந்த வகையில் இப்போது வலிமையான எதிர்க்கட்சியாக இருந்து மக்களுக்கான அரசியலை நாம் தொடர்வோம்.

மீண்டும் வெல்வோம்
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தமிழினத் தலைவர் கலைஞர் வழித்தடத்தில், நூற்றாண்டு கண்ட திராவிடப் பேரியக்கத்தின் கொள்கைகளைச் செயல்படுத்த, இனம், மொழி, நாடு காக்கும் பயணத்தைத் தொடர்வோம். நமது பயணத்தில் எவரையும் பின்தங்க நான் விட மாட்டேன். மீண்டும் வெல்வோம்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved