சேலம், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் தொடர் கனமழை பெய்த நிலையில், பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.சேலத்தில் புதன்கிழமை இரவு பெய்த கனமழையால் மாநகராட்சிக்குட்பட்ட கந்தம்பட்டி பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியது. சிவதபுரம், பனங்காடு, வெடுக்கத்தான் பட்டி, இளம்பிள்ளை, உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு செல்வதற்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனிடையே மழைநீர் தேங்கியிருப்பது தெரியாமல் அவ்வழியாக சென்ற கண்டெய்னர் லாரி தண்ணீரில் மூழ்கியது. கனமழை காரணமாக சேலம் ரயில்நகர் ஏரி உடைந்து செஞ்சிக்கோட்டை, மலகாட்டான் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்தது. சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட்டுள்ளது. புதுச்சேரி நகரப்பகுதி மற்றும் கிராம பகுதிகளான ராஜீவ் காந்தி சிக்னல், நேரு வீதி, கடற்கரை சாலை, முத்தியால்பேட்டை, அரியாங்குப்பம், ரெட்டியார் பாளையம், மேட்டுப்பாளையம், பத்து கண்ணு, கிருமாம்பாக்கம், மதகடிப்பட்டு, உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.இந்நிலையில், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் அரசு பொது மருத்துவமனையில் மழைநீர் சூழ்ந்ததால் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.