சூரிய குளியல், நீராவி குளியல், எண்ணெய் குளியல் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், உடல் சூட்டை குறைத்து சரும பாதிப்புகளை குறைக்கும் மண் குளியல் பற்றி தெரியுமா? மண் குளியல் என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன? பெரும்பாலானவர்கள் ஷாம்பு, சோப்பு, கண்டிஷனர் பயன்படுத்தி குளிப்பது வழக்கம். ஆனால், மண்ணால் குளிப்பது உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் என்கின்றனர், இயற்கை மருத்துவ வல்லுநர்கள்.மண்ணை கையால் தொட்டாலே அழுக்கு, நோய்த் தொற்று வரும் என்பார்கள். அப்படிப்பட்ட மண்ணை நம் முன்னோர்கள் குளியலுக்கு பயன்படுத்தி ஆரோக்கியமுடன் வாழ்ந்துள்ளனர். கிராமப்புறங்களில் களிமண் தேய்த்து குளிக்கும் பழக்கம் இருந்துள்ளது. நமது இந்த பாரம்பரியத்தை மறக்காமல் இருக்கவே, கோயில் திருவிழாக்களில் சேற்றை வாரிப் பூசிக் கொள்ளும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இது, வெறும் சம்பிரதாயமாக இல்லாமல் அதற்கு பின்னால் இருக்கும் மருத்துவ நலன்களை தெரிந்து கொள்வது அவசியமாகிறது. மண்ணுக்கும், குளியலுக்கும் பாரம்பரிய தொடர்பு இருப்பதாக கூறும் இயற்கை மருத்துவர்கள், மண் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியமான ஒன்று என்கின்றனர். மண் குளியல் மருத்துவ சிகிச்சையாகவும் பயன்படுத்தப்படுகிறது. அதாவது, நிலத்தில் 4 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டி மண் எடுக்கப்பட்டு அதில் இருக்கும் கற்கள், கழிவுகளை நீக்கி மண்ணை சலித்து எடுத்து, சூரிய ஒளியில் உலர்த்த வேண்டும். பின்னர், குளியலுக்கு பயன்படுத்தும் மண்ணை ஒரு பாத்திரத்தில் எடுத்து, குளிர்ந்த நீரால் குழைத்து உடலில் பூச வேண்டும். உடலில் மண் பூசும்போது, பாதத்திலிருந்து மேல் நோக்கிப் பூசி 30 நிமிடங்கள் சூரிய ஒளி உடலில் படுமாறு நின்ற பிறகு குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். இப்படி செய்யும்போது உடல் வெப்பம் தணிந்து, சம நிலை ஏற்படுவதுடன். உடலில் மண்ணை பூசுவதால் சருமம் சார்ந்த நோய்களுக்கு தீர்வாகவும் உள்ளது. நோய் பாதிப்புகளை பொறுத்து மண் குளியல் சிகிச்சை அளிக்கப்படலாம் என இயற்கை மருத்துவர்கள் கூறுகின்றனர். அதாவது வயிறு தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டவர்களின் அடி வயிற்றில் மண்ணை தடவி உலர வைத்தால் ஜீரண கோளாறு நீங்கி, உடல் சூடு தணிக்கப்படும் என கூறப்படுகிறது. இதேபோல், மண் கட்டிகளை தலையில் வைத்து உலர்த்தும் போது, தலைவலி குறையும் என்றும், கண் பார்வை, இமைப்படல அழற்சி, சரும ஒவ்வாமை உள்ளிட்ட பிரச்சனைகள் சரியாகும் என கூறப்படுகிறது. நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மண் குளியலை எடுத்துக் கொள்ளும்போது அவர்களுக்கு தோலில் ரத்த சுழற்சி சீராகும் என்றும், மன உளைச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மண் குளியல் உதவலாம் என்றும் கூறப்படுகிறது. பொதுவாக, உடலில் கழிவுகள் தங்குவதே பல்வேறு நோய்க்கு காரணம் என கூறப்படுகிறது. உடல் கழிவுகள் வியர்வையாக வெளியேற்றப்படும் போது தோல்களில் அரிப்பு போன்ற அலர்ஜி ஏற்பட்டு சருமம் பாதிக்கப்படும். இதுபோன்ற நேரத்தில், மண் குளியலை மேற்கொண்டால் தோல் நோய்கள் குணமாவதுடன், முடக்குவாதம், பாத எரிச்சல், சிறுநீரக பிரச்சனைகளும் தீரும் என்று இயற்கை மருத்துவர்கள் கூறுகின்றனர்.