news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news அதிமுக விவகாரம், மன்னிப்பு கடிதம் கேட்டதால்தான் வீராப்பா?
tv

Also Watch

tv

Read this

அதிமுக விவகாரம், மன்னிப்பு கடிதம் கேட்டதால்தான் வீராப்பா?

அனலை கக்கியதுபோன்று CVS ஆவேசம்

8

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்து, கடந்த 20 நாட்களுக்கும் மேலாக அதிமுகவில் ஆளுக்கொரு பக்கமாக முகத்தை திருப்பி வைத்துக்கொண்டிருந்த இபிஎஸ் தரப்பும், வேலுமணி தரப்பும், கட்சி காணாமல்போகுமோ என்ற கவலையில் ஒருவழியாக கரம் கோர்த்துள்ளது அக்கட்சியினரை நிம்மதி பெருமூச்சுவிட வைத்துள்ளது. ஆனால், முன்வைத்த காலை பின்வைக்கமாட்டேன் என்பதுபோல் ஆரம்பத்தில் இருந்தே பிடி கொடுக்காமல் இருந்துவரும் சி.வி.சண்முகம், எள்ளை அள்ளிப்போட்டால் ஏழடி தூரத்திற்கு வெடித்துவிடும் அளவுக்கு கடுப்பை கக்கி உள்ள நிலையில் அவர் ராஜினாமா செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுகவில் களேபரம்
தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும் ஆட்சியமைக்க முடியாமல் பெரும்பாடுபட்ட தவெகவில்கூட தற்போது அமைதி திரும்பி, அடுத்தகட்ட வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 3ஆவது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுகவில் அந்த 3ஆவது இடமே எடப்பாடி பழனிசாமியால்தான் கிட்டியது, தன் இஷ்டத்திற்கு அவர் செயல்பட்டதால்தான் எதிர்க்கட்சி அந்தஸ்துகூட கை நழுவிச் சென்றதாகக்கூறி சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் தலைமையிலான 25 எம்எல்ஏக்கள் தனியாக பிரிந்து சென்று தவெகவிற்கு ஆதரவு தெரிவித்தனர்.

இபிஎஸ் Vs சிவிஎஸ்
இதனால், கோபமடைந்த இபிஎஸ், அவர்களது கட்சிப்பதவியை பறிக்க, அடுத்த சில நாட்களில் ஆற்காடு தொகுதி எம்எல்ஏ சுகுமார், பண்ருட்டி எம்எல்ஏ மோகன், அந்தியூர் எம்எல்ஏ ஹரி பாஸ்கர், சங்கரன்கோவில் எம்எல்ஏ திலீபன், காங்கேயம் எம்எல்ஏ என்.எஸ்.என். நடராஜன் ஆகிய 6 பேர், சிவிஎஸ் தரப்பில் இருந்து கழன்று இபிஎஸ் தரப்பில் பேட்ச் அப் (Patch up) செய்து கொண்டனர். கட்சி தாவல் தடை சட்டம் பாய்ந்து பதவி பறிபோனால் என்ன செய்வது? என்ற உதறல்தான் அவர்களை கூடுவிட்டு கூட பாய வைத்துள்ளதாக சொல்லப்பட்டது.

எம்எல்ஏக்கள் ராஜினாமா
இந்த பாய்ச்சல் நடந்த அடுத்த சில மணி நேரத்திலேயே மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகிய 3 பேரும் தங்கள் பதவியையே ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஆஜராகினர். இதன் தொடர்ச்சியாக அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையாவும் பதவியை ராஜினாமா செய்துவிட்டு விசில் பக்கம் சென்றார்.

அதிமுக நிலை கவலைக்கிடம்
அடுத்தடுத்து நடந்த இந்த தாவலும், ராஜினாமாக்களும் இபிஎஸ் தரப்பை ஸ்ட்ராங் ஆக்கியது, சிவிஎஸ் தரப்பு வீக் ஆக்கியது என்ற பேதத்தை தாண்டி அதிமுகவின் நிலையை தான் கவலைக்கிடமாக்கியது என்பதே உண்மை. இதனை உணர்ந்த வேலுமணி தரப்பினர், முக்கிய நிர்வாகி ஒருவரின் இல்லத்திற்கு சென்று மணிக்கணக்கில் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், வேலுமணி தரப்பினர் விதித்த நிபந்தனைகளுக்கு இபிஎஸ் தரப்பு கொஞ்சமும் செவி சாய்க்காததால் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, வேலுமணி தரப்பினர் நிபந்தனைகளை ஓரளவு தளர்த்தியும் இபிஎஸ் தரப்போ மிஞ்சியது.

பேச்சுவார்த்தையில் இழுபறி
இந்த பேச்சுவார்த்தையிலேயே விருப்பமில்லாத சி.வி.சண்முகம், ஆரம்பத்தில் இருந்தே பங்கேற்கவில்லை என்பது தனிக்கதை. இதனிடையே, கண்முன்னே கட்சி அழிந்தால் அது ”தன் விரலாலேயே தன் கண்ணை குத்திக்கொள்வதற்கு சமம்” என்பதை கருத்தில் கொண்ட வேலுமணி தரப்பினர், ஏற்கெனவே நடந்த பேச்சுவார்த்தையின்போது முன்வைத்த நிபந்தனைகளை எல்லாம் ஒரு ஓரமாக வைத்துவிட்டு இபிஎஸ் உடன் இணைய முடிவெடுத்தனர். இதன்படி, ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் பேச்சுவார்த்தைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், வரும்போது அப்பாலஜி லெட்டரோடு தான் வரவேண்டும் என இபிஎஸ் தரப்பு ஒரு இக்கு வைக்க அப்படி ஒன்றும் இணையவே வேண்டாம் என இணைப்பையே துண்டித்தனர் வேலுமணி தரப்பினர்.

இனி எவராலும் அசைக்க முடியாது
வேதாளம் முருங்கை மரம் ஏறியதுபோல், மீண்டும் ஆளுக்கொரு பக்கமாக அதிமுகவினர் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டனர். இருதரப்பினரும் இணைந்து இனியாவது இரட்டை இலையை கருகாமல் பார்த்துக்கொள்வார்கள் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த கட்சி நிர்வாகிகளும், அடிமட்ட தொண்டர்களும் அச்சச்சோ என உச் கொட்டியதுதான் மிச்சம். ஆனாலும், நிலைமை மோசமாவதை உணர்ந்த இருதரப்பினரும் அணியை இணைப்பது என்ற முடிவில் உறுதியாக இருந்தனர். அதனால், இபிஎஸ் இல்லத்திற்கு சென்ற எஸ்.பி.வேலுமணி தலைமையிலான 14 எம்எல்ஏக்கள் மன்னிப்பு கடிதத்தையும் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவை வாக்கெடுப்பின்போது தவெகவிற்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாகவும் கடிதம் அளித்தனர். இதனிடையே, கோடான கோடி தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த இந்த எஃகு கோட்டையை இனி எவராலும் அசைக்க முடியாது. இனி நமக்குள் பிரிவில்லை. இந்த எஃகு கோட்டையை தகர்க்க இனி எவருக்கும் வழியில்லை என அதிமுக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

சபாநாயகருடன் சந்திப்பு
இரு தரப்பினருக்குள்ளும் ஒருவழியாக சமரசம் கைகூடியதும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அலுவலகத்திற்கு சென்ற இருதரப்பினரும் கொறடா விவகாரம் தொடர்பாக சபாநாயகரிடம் அளித்த கடிதத்தை திரும்ப பெற்றதோடு ஒரே அணியாக செயல்படுவதாகவும் கூறி உள்ளனர். மேலும், எடப்பாடி பழனிசாமியை அதிமுக சட்டமன்ற குழு தலைவராக நியமிக்கக்கோரி கடிதம் வழங்கியவர்கள் அதிமுக கொறடாவாக அக்ரி கிருஷ்ணமூர்த்தியை நியமிக்கக்கோரியும் கடிதம் வழங்கினர்.

பிளவு இல்லை, கருத்து வேறுபாடு
இதற்குபின்னர் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி.வேலுமணி, ஆரம்பத்தில் இருந்தே அதிமுகவில் எந்தப் பிளவும் இல்லை, கருத்து வேறுபாடுகள் தான் இருந்தன, அதுவும் சரிசெய்யப்பட்டு தற்போது நாங்கள் ஒற்றுமையாகதான் இருக்கிறோம் எனக் கூறினார். மேலும், சி.வி. சண்முகம் எங்களோடுதான் இருக்கிறார் எனவும் தெரிவித்தார். ஆனால், கடைசியாக கொடுத்த கடிதங்களில் சி.வி.சண்முகம் கையெழுத்து உள்ளதா? என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார். அதேபோல் செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், “இரண்டு தரப்பு கடிதங்களும் கிடைக்கப் பெற்றுள்ளன, அவற்றைப் பரிசீலித்து அதன் மீதான என் முடிவை காலையில் அறிவிப்பேன் எனத் தெரிவித்து உள்ளார்.

கொள்கையில் உறுதி
இதுஒருபுறமிருக்க, சமாதான பேச்சுவார்த்தை முதல், இருதரப்பினரும் ஒன்று சேர்ந்தது வரை எதிலுமே தலைகாட்டாத சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க முடியாது என்ற கொள்கையில் தற்போதுவரை உறுதியாக இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், அவரை காம்ப்ரமைஸ் செய்வதற்காக நேரில் சென்ற அதிமுக மூத்த நிர்வாகிகள் ஒன்றரை மணிநேரத்திற்கும்மேல் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அப்போது, எடுத்த முடிவில் இருந்து பின்வாங்கப்போவதில்லை எனக்கூறிய சி.வி.சண்முகம், எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதம் கட்சிக்கு நல்லதல்ல எனவும், என்னோடு பயணிப்பவர்கள் பயணிக்கலாம், விருப்பமில்லாதவர்கள் அவரவர் விருப்பப்படியே செயல்படலாம் எனவும் கூறியதாக தெரிகிறது. அதோடு அவர் ராஜினாமா செய்யப்போவதாவும், அவருடன் சேர்ந்து விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்ய இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

நோ கமெண்ட்ஸ் - சி.வி.சண்முகம்
இந்த சமாதான பேச்சுவார்த்தைக்குப்பின், சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த சி.வி.சண்முகத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, கடுகடுவென முகத்தை வைத்துக்கொண்டு அனலை கக்குவது போன்று ஆவேசத்தை காட்டிய அவர், செய்தியாளர்களை கண்டித்ததுடன் நோ கமெண்ட்ஸ் எனக் கூறிவிட்டுச் சென்றார். அதனை பார்க்கும்போதே தெரிந்தது சமாதானப்படலம் சண்டைப்படலமாக முடிந்தது என்பதும், அரசியலில் அவர் தனித்துவிடப்பட்டதால் வெளிவந்த ஆக்ரோஷம் என்பதும். சோவென மழை பெய்து வெறித்ததுபோல், தேர்தல் முடிவுகள் வெளியானதுபோல் பிரச்சனைகளிலேயே சுற்றி சுழன்று கொண்டிருந்த அதிமுகவில் ஒருவழியாக அணி என்னவோ ஒன்றாகிவிட்டது. ஆனால், சிலுப்பிக்கொள்ளும் சி.வி.சண்முகத்தைதான் எப்படி சமாதானப்படுத்துவது என தெரியாமல் மூத்த நிர்வாகிகளே முழித்துக் கொண்டிருக்கிறார்களாம்.

Related Link
பிரதமரை சந்தித்த முதல்வர் விஜய், பத்து நிமிடம் பரபரத்த சந்திப்பு

பிரதமரை சந்தித்த முதல்வர் விஜய், பத்து நிமிடம் பரபரத்த சந்திப்பு

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெகவில் இணைகிறாரா விஜயபாஸ்கர்? அதிரடி பதில்

3
11 mins agoshare
தவெகவில் இணைகிறாரா விஜயபாஸ்கர்?button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved