news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news அதிமுக கரைந்து விடும், மன்னிப்பு முக்கியம், அடுத்து என்ன?
tv

Also Watch

tv

Read this

அதிமுக கரைந்து விடும், மன்னிப்பு முக்கியம், அடுத்து என்ன?

CVS தரப்பை TRIGGER செய்த EPS தரப்பு

11

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

அதிமுகவில், சி.வி.சண்முகம் தரப்பில் உள்ள எம்எல்ஏக்கள் ஏற்கெனவே ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்த நிலையில் தற்போது அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையாவும், ராஜினாமா செய்து அதிமுகவை பலமிழக்க வைத்துள்ளார். எஞ்சிய எம்எல்ஏக்களையாவது கைவசம் வைத்துக் கொண்டால்தான் கட்சியாவது கரையாமல் இருக்கும் என்ற நோக்கத்தில் சிவிஎஸ் தரப்பு இறங்கிவர, வெண்ணெய் திரண்டுவரும்போது பானை உடைந்ததுபோல் மன்னிப்பு கடிதத்தோடு வந்தால்தான் இணைப்பே என இபிஎஸ் தரப்பு TRIGGER செய்துள்ளனர்.

என்ன நடக்கிறது அதிமுகவில்?
அதிமுகவில் நடக்கும் அரசியல் பரபரப்பு, ஒவ்வொன்றும் தனிரகம்தான். தலைப்புச்செய்தியும் அதுதான். தேர்தலில் தோல்வியை தழுவ முழுமுதற் காரணம் இபிஎஸ்தான் என முறைத்துக்கொண்டு சி.வி.சண்முகம் தலைமையில் 25 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்க அவர்களை கட்சி பதவியில் இருந்தே தூக்கி தனது பவரை காட்டினார் இபிஎஸ். இதனிடையே, கட்சி தாவல் தடை சட்டம் பாய்ந்து உள்ள பதவியும் கைவிட்டுப் போய்விடுமோ? என்ற பயத்தில் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளரும் ஆற்காடு தொகுதி எம்எல்ஏவுமான சுகுமார், பண்ருட்டி எம்எல்ஏ மோகன், அந்தியூர் எம்எல்ஏ ஹரி பாஸ்கர், சங்கரன்கோவில் எம்எல்ஏ திலீபன், காங்கேயம் எம்எல்ஏ என்.எஸ்.என். நடராஜன் ஆகிய 4 பேர் இபிஎஸ்ஸை சந்தித்து பழையபடியே அவரது கூட்டுக்குள் இணைந்து கொண்டனர்.

தவெகவில் அதிமுகவினர்
இதனை தொடர்ந்து, மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்எல்ஏ சத்யபாமா ஆகிய 3 பேரும் பதவியையே ராஜினாமா செய்துவிட்டு, அமைச்சர் ஆதவ் அர்ஜூனா முன்னிலையில் தவெகவில் ஐக்கியமாகினர். கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவை இப்படியே விட்டுவிட்டால் சல்லி சல்லியாக நொறுங்கிவிடும் என்றெண்ணி, இபிஎஸ் மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

வேலுமணி தரப்பின் நிபந்தனைகள்
சென்னையில் உள்ள அதிமுக முக்கிய நிர்வாகி ஒருவரின் இல்லத்தில் சுமார் 4 மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்ததாகவும், இபிஎஸ் சார்பில் அவரது ஆதரவாளர்களும் எதிர் தரப்பில் வேலுமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது. அந்த பேச்சுவார்த்தையின்போது, அதிமுகவில் வழிகாட்டு குழு ஒன்றை அமைக்க வேண்டும், அந்த வழிகாட்டு குழு எடுக்கும் முடிவையே அதிமுக பொதுச்செயலாளர் செயல்படுத்த வேண்டும், வழிகாட்டு குழுவில் இருதரப்பை சேர்ந்தவர்களும் இடம்பெற வேண்டும், தங்களிடமிருந்து பறிக்கப்பட்ட பதவிகளை திரும்ப அளிக்க வேண்டும், கட்சி பிளவுபட்டபோது யார் எந்த பதவியில் இருந்தார்களோ அதே பதவியைதான் கட்டாயம் தொடர வேண்டும், வேலுமணி தரப்பை நம்பி வந்த யார் மீதும் நடவடிக்கை கூடாது என்ற நிபந்தனைகளை வேலுமணி தரப்பினர் முன்வைத்ததாக கூறப்படுகிறது.

அதிகாரத்தை குறைக்க திட்டம்
இந்த நிபந்தனைகளை எல்லாம் காதுகொடுத்து கேட்ட இபிஎஸ் தரப்பு வழிகாட்டு குழு அமைக்க வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படும் நிலையில், வழிகாட்டுகுழு அமைத்தால் தனது அதிகாரம் குறையும் என இபிஎஸ் எண்ணுவதாகவும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாது, வேலுமணி தரப்பினரின் பதவிகளை திருப்பி அளிப்பதிலும் இபிஎஸ் நிபந்தனை விதித்ததாக கூறப்படும் நிலையில் ஒருவேளை மாவட்ட செயலாளர் பதவியை திருப்பி அளித்தாலுமே அதிகாரத்தை குறைக்க திட்டமிட்டுள்ளாராம்.

சி.வி.சண்முகம் பங்கேற்கவில்லை
வேலுமணி, தற்போது 10 தொகுதிகளுக்கு சேர்த்து மாவட்ட செயலாளராக உள்ளார். அதனை 2 அல்லது 3 ஆக உடைத்து ஒன்றிற்கு மட்டும் வேலுமணியை மாவட்ட செயலாளராக்க சம்மதித்து உள்ளதாகவும் தற்போது நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்களின் அதிருப்தியை சம்பாதிக்க இபிஎஸ் விரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது. அதேநேரம் இபிஎஸ் தரப்புடனான இந்த பேச்சுவார்த்தையை சி.வி.சண்முகம் விரும்பவில்லை எனவும் உடன் இருப்பவர்கள் விருப்பத்தை ஏற்றே சி.வி.சண்முகம் இறங்கி வந்ததாகவும் கூறப்படும் நிலையில் பேச்சுவார்த்தையில் சி.வி.சண்முகம் பங்கேற்கவும் இல்லை.

மீண்டும் பேச்சு வார்த்தை
நான்கு மணிநேரத்திற்கும்மேல் பேச்சுவார்த்தை நடந்தும் ஒருவரது முடிவில் மற்றொருவருக்கு ஈடுபாடு இல்லாததால் முடிவு எட்டப்படவில்லை. தொடர்ந்து, காலை 11 மணிக்கு மீண்டும் இருதரப்பு சமாதானப்பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அப்போது, அனைத்திற்கும் தலையாட்டாவிட்டா விட்டாலும் நீக்கிய மாவட்ட செயலாளர்களுக்கு மீண்டும் பொறுப்பு வழங்க வேண்டும், ⁠கட்சியில் உயர்மட்ட குழுவை அமைக்க வேண்டும், பொதுக்குழுவை கூட்டி தோல்வி குறித்து ஆராய வேண்டும் என்ற 3 நிபந்தனைகளுக்கு மட்டும் சம்மதம் என்றால் மீண்டும் இணைந்துகொள்வோம் என வேலுமணி தரப்புகூற முதலில் வாருங்கள், பின்பு அதை பேசிக்கொள்ளலாம் என இபிஎஸ் மழுப்பியதாக தெரிகிறது. இதில், வேலுமணிக்கு உடன்பாடு இருந்தாலும் சி.வி.சண்முகத்திற்கு துளியும் விருப்பமில்லை என கூறப்படும் நிலையில் அவரை தனிப்பட்ட முறையில் காம்ப்ரமைஸ் செய்ய முயற்சி நடக்கிறதாம்.

இசக்கி சுப்பையா ராஜினாமா
இப்படி, அதிமுகவில் அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் ஏற்பட, அடுத்து என்ன நடக்குமோ? என அரசியல் வட்டாரமே உற்று நோக்கியது. சி.வி.சண்முகம் அணியில் இருந்த அம்பாசமுத்திரம் தொகுதி எம்எல்ஏ இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார். முன்னதாக, சென்னை தலைமை செயலகத்திற்கு வந்த அவர் தட்டச்சு செய்யப்பட்டு கையெழுத்திடப்பட்ட ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் கொடுத்தார். ஆனால், கைப்பட எழுதி தருமாறுகூறி கடிதத்தை ஏற்க மறுத்தார் சபாநாயகர். பின்னர் கைப்பட எழுதி கொடுத்ததும் கடிதத்தை ஏற்றுக்கொண்டார்.

சபாநாயகருடன் சந்திப்பு
இதனிடையே, சட்டமன்ற குழு தலைவர் மற்றும் கொறடா குறித்து இன்னும் முடிவெடுக்காத சூழலில், அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேரின் ராஜினாமாவை ஏற்ற முடிவை வாபஸ் பெற வலியுறுத்தி இபிஎஸ் தரப்பு எம்எல்ஏக்களான அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தளவாய் சுந்தரம், இன்பதுரை ஆகியோர் சபாநாயகரிடம் மனு அளித்தனர். அப்போது, கட்சி தாவல் புகாருக்கு ஆளான எம்எல்ஏக்களின் ராஜினாமாவை எப்படி ஏற்றுக் கொள்ளலாம் எனவும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

நிபந்தனைகள் இன்றி...
இதுஒருபுறமிருக்க, திருத்தணி எம்எல்ஏ ஹரி, தருமபுரி எம்எல்ஏ கே.பி.அன்பழகன், கரூர் எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர், மயிலம் எம்எல்ஏ சிவி சண்முகம், அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி ஆகியோர் சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள சி.வி.சண்முகம் அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டனர். ஏற்கெனவே 4 எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்துள்ள நிலையில் எஞ்சிய எம்எல்ஏக்களும் கழன்றால் கடைசியில் கட்சியே காணாமல்போய்விடும், அதனால் உள்ளுக்குள் உள்ள ஈகோவை துடைத்தெறிந்துவிட்டு எந்தவித நிபந்தனையுமின்றி அணிகள் இணைப்பு குறித்து மாலை 4 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்த இருதரப்பினரும் தயாராகினர்.

பேச்சுவார்த்தையில் பின்னடைவு
ஆனால், வரும்போது சால்வை, பூங்கொத்து உள்ளதோ இல்லையோ மன்னிப்பு கடிதம் மஸ்ட் என இபிஎஸ் தரப்பில் இருந்து ஒரு அழைப்புவர டென்ஷன் ஆன வேலுமணி தரப்பு மன்னிப்பு கடிதமா? அதற்கு வாய்ப்பே இல்லையெனக்கூறி இணைப்பை துண்டித்து விட்டார்களாம். அதனால், வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் பானை உடைந்ததுபோல் அதிமுகவின் நிலையும் பின்னடைவில் உள்ளது.

Related Link
தவெகவின் ஸ்மார்ட் மூவ், பரபரப்பைக் கிளப்பும் ராஜினாமா

தவெகவின் ஸ்மார்ட் மூவ், பரபரப்பைக் கிளப்பும் ராஜினாமா


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுகவிற்கு எதிராக போராட வேண்டாம் - திருமாவளவன் அறிவுறுத்தல்

4
12 mins agoshare
திருமாவளவன் அறிவுறுத்தல்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved