போதைப்பொருள் விவகாரத்தில், சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்திருக்கலாம் என்ற அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அனுப்பிய சம்மனுக்கு, நடிகர் ஸ்ரீகாந்த் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். போதைப்பொருள் வழக்கில் கைதாகி வெளியே வந்த நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. கிருஷ்ணா ஏற்கனவே ஆஜரான நிலையில், ஸ்ரீகாந்த் கால அவகாசம் கேட்டதையடுத்து, இன்று ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டாவதாக சம்மன் அனுப்பி இருந்தனர்.இந்த சம்மனை ஏற்று, இன்று காலை 10:30 மணி அளவில் நடிகர் ஸ்ரீகாந்த் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.